நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் தமிழக அரசின் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களிடம் தமிழக அமைச்சர்கள் நேரில் வலியுறுத்தியுள்ளனர். 

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வகைசெய்யும் சட்ட மசோதாக்கள் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. 

இந்த சட்டங்கள் குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு பல மாதங்களுக்கு முன்பே அனுப்பி வைக்கப்பட்டன. 
ஆனால் இதுவரை குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளிக்காததால், நேற்று அ.இ.அ.தி.மு.க எம்.பி.க்கள் உள்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங்கை சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தினர். 

இதனைத்தொடர்ந்து இன்று தமிழக அமைச்சர்கள்  ஜெயகுமார், தங்கமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், விஜய பாஸ்கர்  ஆகியோர், மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜாவ்டேகர், ஜே.பி. நட்டா, ரவி சங்கர் பிரசாத்  ஆகியோரை சந்தித்தனர்,

அப்போது நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் தமிழக அரசின் சட்ட மசோதாவிற்கு விரைவில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுத்தருமாறு வலியுறுத்தனர். 

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகம் சென்ற தமிழக அமைச்சர்கள் அங்கு மோடியை சந்தித்துப் பேசினர். அப்போது நீட் தேர்விலி இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுத் தருமாறு வலியுறுத்தினர்.