மதுரையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழக அரசு பல்வேறு தேசிய விருதுகளை வென்றுள்ளது. ‘இந்திய டுடே’ ஆய்வில் தமிழக முதல்வர் நல்ல நிர்வாகம் வழங்குகிறார் என தெரிவித்துள்ளது. மதுரையில் கொரோனா நோய் தொற்று பரவல் 18 சதவீதத்திலிருந்து தற்போது 0.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. 280 நோயாளிகள்தான் தற்போது கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் தற்போது ஒருவர்கூட இல்லை.

 
அதிமுக அரசின் சிறந்த செயல்பாட்டு உதாரணமாக அம்மா கிச்சன் உள்ளது. கடந்த 150 நாட்களில்  சுமார் 15 லட்சம் உணவு, சத்து பானங்கள் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.  சமீபத்தில் நிவர் புயலை தமிழக அரசு கையாண்ட விதம் குறித்து எல்லோரும் பாராட்டுகிறார்கள். புயல் வருவதற்கு முன்பே முகாம்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டனர். தமிழக வரலாற்றில் முதன் முறையாக அவசர கட்டுபாட்டு மையத்துக்கு சென்று முதல்வர் ஆய்வு நடத்தினார். தற்போது அனைத்து நீர் நிலைகளும் தமிழகத்தில் நிரம்பியுள்ளது. அதற்கு தமிழக முதல்வரின் ராசிதான் காரணம்.

 
திமுக ஓட்டு வாங்குதற்காக அதிமுக அரசை குறை கூறலாம். ஆனால், திமுகவின் உள்நோக்கம் எடுபடாது. அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திமுக நாள்தோறும் குறை சொல்லி அறிக்கை கொடுத்தாலும் பலன் இல்லை. இந்தியாவின் நவீன இரும்பு மனிதராக உள்ள மத்திய  உள்துறை அமைச்சர் அமித்ஷாவே, சென்னையில் அதிமுக அரசின் செயல்பாட்டை பாராட்டினார். நடிகர் ரஜினி நல்லவர். அவர் என்ன முடிவு எடுத்தாலும் வரவேற்கிறேன்.” என்று ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.