தைரியம் இருந்ததால் தான் உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது, மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்காமல் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க வேண்டும், பாஜகவை நோட்டா உடன் ஒப்பிட்டு ஒப்பிட்டு தான் இப்போது  நான்கு பாஜகவினர் சட்டமன்றத்திற்குள் நுழைந்துள்ளனர். எனவே இனி பாஜகவை நோட்டாவுடன் ஒப்பிடுவது எடுபடாது.

நோட்டா வுடன் ஒப்பிட்டு ஒப்பிட்டு தான் பாஜகவில் இருந்து நான்கு பேர் சட்டமன்றம் சென்றுள்ளனர், எனவே பாஜகவை நோட்டாவுடன் ஒப்பிடுவதெல்லாம் இனி எடுபடாது என பாஜக பிரமுகர் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்காமல் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்க வேண்டும் என்றும் அப்போதுதான் ஜனநாயகம் நிலைநாட்டப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சென்னை வேளச்சேரியில் தனது ஜனநாயகக் கடமையாற்றிய அவர் இவ்வாறு கூறினார்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி,, பேரூராட்சி களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சி களுக்கும் இந்த தேர்தல் நடைபெறுகிறது. மாநகராட்சி பகுதிகளில் உள்ள 1374 வார்டுகளிலும், நகராட்சி பகுதிகளில் உள்ள 3 ஆயிரத்து 843 வார்டுகளிலும், பேரூராட்சி பகுதியில் 7,621 வார்டுகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மாநகராட்சி பகுதிகளில் 15,158 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.நகராட்சி பகுதிகளில் 7 ஆயிரத்து 417 வாக்குச்சாவடிகளிலும் பேரூராட்சி பகுதிகளில் 8454 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது, மொத்தம் இரண்டரை கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். 1.13 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 1,800 இடங்கள் பதட்டமானவை என போலீசார் கண்டறிந்துள்ளன. பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிரபலங்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது பகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்களித்து வருகின்றனர். அந்தவகையில் பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் நடிகை குஷ்பு

சென்னை உள்ள வார்டு எண் 126 -ல் உள்ள மந்தைவெளி ஸ்ரீ ராஜலக்ஷ்மி மெட்ரிகுலேஷன் பள்ளியில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் நடிகை மற்றும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு தனது வாக்கினை பதிவு செய்தார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தைரியம் இருந்ததால் தான் உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது, மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்காமல் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க வேண்டும், பாஜகவை நோட்டா உடன் ஒப்பிட்டு ஒப்பிட்டு தான் இப்போது நான்கு பாஜகவினர் சட்டமன்றத்திற்குள் நுழைந்துள்ளனர். எனவே இனி பாஜகவை நோட்டாவுடன் ஒப்பிடுவது எடுபடாது. வெற்றி தோல்வி யாருக்கு என்பதை இப்போது கூற முடியாது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் அப்படி கூறுவது சரியாக இருக்காது இவ்வாறு அவர் கூறினார்.