09:57 PM (IST) Feb 19

மாவட்ட வாரியாக இறுதி வாக்குபதிவு சதவீதம்..

திருப்பூர் - 60.66%, நாமக்கல் - 76.86%, விருதுநகர் - 69.24%, ராணிப்பேட்டை - 72.24%, மதுரை - 57.09%, தஞ்சை - 66%, மயிலாடுதுறை - 65.77%, நாகை - 69.19%, ராமநாதபுரம் - 68.03%, கள்ளக்குறிச்சி - 74.36%, திருவாரூர் - 68.25%, செங்கல்பட்டு - 49.64%, புதுக்கோட்டை - 69.61%, திருவள்ளூர் - 65.61%, தருமபுரி - 80.49%, வேலூர் - 66.68%, திருச்சி - 61.36%, தென்காசி - 70.40% வாக்குகள் பதிவாகியுள்ளன.

09:26 PM (IST) Feb 19

சேதமான வாக்குப்பதிவு இயந்திரம்..ஓடைக்குப்பத்தில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படுமா..?

சென்னை ஓடைக்குப்பம் 179 வது வார்ட்டில் திமுக வேட்பாளரின் உறவினர் வாக்கு செலுத்தும் இயந்திரத்தை சேதப்படுத்தியதாக அதிமுக புகார் தெரிவித்துள்ளது.வாக்குச்சாவடி மையத்திற்கு புதிய இயந்திரம் கொண்டுவரப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.பழைய வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எடுக்கலாம் என்று தொழில்பிரிவினர் கூறியுள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.மேலும் மறுவாக்குப்பதிவு நடத்தப்படுமா என்பதை பற்றி சென்னை தேர்தல் அதிகாரியிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

09:07 PM (IST) Feb 19

வாக்கு எண்ணிக்கையாவது நேர்மையாக நடத்தப்படுமா - பாஜக கேள்வி

நகர்ப்புற தேர்தலில் ஆளும் கட்சியினரின் உத்தரவுகளை அப்படியே மாநில தேர்தல் ஆணையம் செய்துக் காட்டியுள்ளது என்று பாஜக குற்றச்சாட்டியுள்ளது.பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையாவது மாநில தேர்தல் ஆணையம் நேர்மையாக நடத்துமா என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.மேலும் மாநிலம் முழுவதும் பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிவர இயங்கவில்லை எனவும் அவர் குற்றச்சாட்டியுள்ளார்.

08:48 PM (IST) Feb 19

நகர்ப்புற தேர்தல் அமைதியாக நடைபெற்றது.. கூடுதல் பாதுகாப்பினால் வன்முறை சம்பவங்கள் தவிர்ப்பு..டிஜிபி சைலேந்திர பாபு

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்றது என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். ஒரு சில இடங்களில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் உடனடியாக விரைந்து சரி செய்யப்பட்டது என்று டிஜிபி தெரிவித்துள்ளார். மேலும் பதற்றமான வாக்குசாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டதால் வன்முறை சம்பவங்கள் தவிர்க்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.இதனிடையே சில நிகழ்வுகள் குறித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

08:33 PM (IST) Feb 19

கொளத்தூர் வாக்குசாவடி மையத்தில் பாஜகவினர் தாக்குதல்..

சென்னை கொளத்தூர் எவர்வின் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் பாஜகவினர் தாக்குதல் நடத்தினர்.இதில் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சத்யா, திமுக உறுப்பினர் தமிழ்வாணன் ஆகிய இருவர் படுகாயமடைந்தனர்.மேலும் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

08:13 PM (IST) Feb 19

பாஜகவின் போராட்டத்திற்கு பிறகே எல்.முருகனால் வாக்களிக்க முடிந்தது- அண்ணாமலை..

பாஜகவின் போராட்டத்திற்கு பிறகே மத்திய இணையமைச்சர் எம்.முருகன் தமது வாக்கினை செலுத்த முடிந்ததாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.மேலும் அவருடைய வாக்காளர் பட்டியலில் வரிசை எண் 1174, அவர் வருவதற்கு முன்பாகவே வாக்கு செலுத்தப்பட்டு இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.எனவே இந்த வாக்கினை செலுத்தியது யார்.. அனுமதித்தது யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

07:44 PM (IST) Feb 19

ஹிஜாப் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக முகவர் கைது

மதுரை மேலூரில் வாக்குசாவடியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக முகவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மேலூர் 8வது வார்டில் பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றக் கூறி பிரச்னை செய்த பாஜக பூத் ஏஜெண்ட் கிரிராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல்,கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

07:33 PM (IST) Feb 19

நகர்ப்புற தேர்தல் முறைகேடு..மறுவாக்குப்பதிவு கோரி அதிமுக மனு

தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. கொரோனா பாதித்தவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை தங்களது வாக்கினை பதிவு செய்தனர். இந்நிலையில் தேர்தலில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளதாகவும் திமுக அராஜகத்தில் ஈடுப்பட்ட இடங்களில் மறுவாக்குப்பதிவு மீண்டும் நடந்தப்படவேண்டும் எனவும் கோரி அதிமுக சார்பில் மாநில தேர்தல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக சட்டபிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் மனுவினை அளித்தார்.

07:01 PM (IST) Feb 19

மார்ச் 4 ல் மறைமுக தேர்தல்..சென்னை மேயர் யார்..? பெரும் எதிர்பார்ப்பு..

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் வரும் செவ்வாயன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. அதனையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றிபெற்ற புதிய உறுப்பினர்கள் மார்ச் 2 ஆம தேதி பதவியேற்கின்றனர்.தொடர்ந்து மார்ச் 4 ல் மறைமுக தேர்தல் நடைபெறவுள்ளது.அதன்படி, மறைமுக தேர்தலில் மாநகராட்சி மேயர்கள்,துணை மேயர்கள், நகராட்சி , பேரூராட்சி தலைவர்கள், துணைதலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

06:49 PM (IST) Feb 19

ஆர்.கே.நகர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கார் கண்ணாடி உடைப்பு

புதுவண்ணாரப்பேட்டையில் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.எபினேசரின் கார் கண்ணாடி மர்மநபர்களால் உடைக்கப்பட்டுள்ளது.அடையாளம் தெரியாத நபர்கள் கற்கள் வீசி தாக்கியதில் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

06:42 PM (IST) Feb 19

மதுரை திருமங்கலம் நகராட்சியில் மறுவாக்குப்பதிவு..?

மதுரை திருமங்கலம் நகராட்சியில் 17 வது வார்டில் மறுவாக்குபதிவு நடந்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் கள்ள ஓட்டுகள் செலுத்தப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மறுவாக்குப்பதிவு குறித்து மாநில தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

06:29 PM (IST) Feb 19

சென்னை மாநகராட்சியில் 5 மணி நிலவரப்படி 41.68% வாக்குகள் பதிவாகியுள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் மாலை 5 மணி நிலவரப்படி 41.68% வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னையில் காலையில் இருந்து மந்தமாக இருந்த வாக்குப்பதிவு மாலை சற்று அதிகரித்தது. முன்னதாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 31.89% வாக்குகள் பதிவாகி இருந்தது.காலை 9 மணி நிலவரப்படி 3.96%,11 மணி நிலவரப்படி 17.88%,1 மணி நிலவரப்படி 23.42 % வாக்குகள் பதிவாகின.

06:22 PM (IST) Feb 19

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர் மார்ச் 2ல் பதவியேற்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற புதிய உறுப்பினர் மார்ச் 2ல் பதவியேற்கின்றனர். 21 மாநகராட்சி, 138 நகராட்சி,489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 1,369 மாநகராட்சி,3,824 நகராட்சி,7,409 பேரூராட்சி கவுன்சிலர் பதவிகள் என மொத்தம் 12,602 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.வேட்பாளர்கள் மரணம், போட்டியின்றி தேர்வு உட்பட மொத்தம் 57,778 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் மாநகராட்சியில் 11,196 பேர், நகராட்சியில் 17,992 பேர், பேரூராட்சியில் 28,660 பேர் போட்டியிட்டனர்.

06:14 PM (IST) Feb 19

பிப்.,22 ஆம் தேதி செவ்வாயன்று பதிவான வாக்குகள் எண்ணிக்கை..

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் பிப்.,22 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது.மேலும் முகவர்கள் முன்னிலையில் மின்னணு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியுள்ளது. காலை 7 மணி முதல் நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா பாதித்தவர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். மேலும் 5 மணிக்கு முன்பாக வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி கொடுக்கப்பட்டது.

06:07 PM (IST) Feb 19

வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில் மின்னணு இயந்திரங்களுக்கு சீல்..

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.இந்நிலையில் வாக்குப்பதிவு முடிந்ததால் மின்னணு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியுள்ளது.தேர்தல் முகவர்கள் முன்னிலையில் இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்படுகிறது.தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

06:03 PM (IST) Feb 19

முடிந்தது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்..மாலை 6 மணியுடன் நிறைவுப் பெற்ற வாக்குபதிவு

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.5 மணிக்கு முன் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.மேலும் உள்ளாட்சி தேர்தலில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கான வாக்குபதிவு நடைபெற்றது.

05:43 PM (IST) Feb 19

இன்னும் சற்று நேரத்தில் நிறைவடையவுள்ள வாக்குப்பதிவு..

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடையவுள்ளது. காலை 7 மணி தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.5 மணிக்கு முன் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் தற்போது கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கான வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. மாலை 5 முதல் 6 மணி வரை மட்டுமே கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க முடியும்.

05:38 PM (IST) Feb 19

கடைசி இடத்தில் சென்னை.. முதல் இடத்தில் தருமபுரி..தற்போதைய நிலவரம்

சென்னை மாநகராட்சியில் குறைந்த அளவிலே வாக்குகள் பதிவாகியுள்ளது. 31.89% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.மாநிலத்திலே சென்னை மாநகராட்சியில் தான் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளன.அதிக அளவு வாக்குப்பதிவில் தருமபுரி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 64.68 % வாக்குகள் பதிவாகியுள்ளன.

05:23 PM (IST) Feb 19

மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்த நிலையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வாக்களித்தார்.

சென்னை அண்ணாநகர் வாக்குசாவடியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது வாக்கினை பதிவு செய்தார் .முன்னதாக அவரது வாக்கினை வேறு ஒருவர் கள்ள ஓட்டாக போட்டுவிட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டிருந்தார். அதற்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வாக்கினை யாரும் போடவில்லை எனவும் .சம்பந்தப்பட்ட வாக்குபதிவு மையத்தில் இரண்டு முருகன் பெயர் உள்ளது. அதில் ஒன்று தான் பதிவாகியுள்ளது என்று மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.

05:18 PM (IST) Feb 19

வாக்குப்பதிவு நிறைவு..டோக்கன் முறையில் வாக்களிக்க அனுமதி..

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது.5 மணிக்கு முன் வரும் வாக்காளர்களுக்கு டோக்கன் தரப்பட்டு வாக்களிக்க அனுமதி அளிக்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.