அந்த வகையில் பழைய ஜெயங்கொண்டம், சோழபுரம் பேரூராட்சியில் 3வது வார்டில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் கோபிநாத் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை பாஜக வேட்பாளர் தோற்கடித்துள்ளார். பழைய ஜெயங்கொண்டம் சோழபுரம் பேரூராட்சியின் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒத்த ஓட்டு பாஜக என பலரும் பாஜகவை கேலி செய்து வந்த நிலையில் இப்போது ஒத்த ஓட்டில் திமுக வேட்பாளரை வீழ்த்தி பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மினி சட்டமன்ற தேர்தலாகவே கருதப்படுகிறது. கட்சியின் உண்மையான பலத்தை உள்ளாட்சித் தேர்தல் மூலமே அறிய முடியும் என்பதாலும், அடிமட்ட அளவில் கட்சி எந்த அளவிற்கு பலமாக உள்ளது என்பதையும் இத் தேர்தல் மூலமே நிரூபித்துக்காட்ட முடியும் என்பதால் இது அதி முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது. இந்த தேர்தலில் பாமக, பாஜக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் என பல கட்சிகள் தனித்து சந்தித்தாலும், திமுக-அதிமுக விற்கு இடையே போட்டி நிலவியது. ஆனால் இன்று காலை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலிருந்தே திமுக முன்னிலை வகித்த்து.

தற்போது தமிழகம் முழுதும் உள்ள 21 மாநகராட்சிகளையும் திமுகவே கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 138 நகராட்சிகளின் 134 நகராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது. ஒரே ஒரு நகராட்சியில் அதிமுக முன்னிலையில் உள்ளது. மொத்தமுள்ள 489 பேரூராட்சிகளில் 437 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது. அதில் வெறும் 16 பேரூராட்சிகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது. இந்த வெற்றி வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசமாகவே பார்க்கப்படுகிறது.
திமுக எதிர்பார்த்ததை விட இமாலய வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும் உள்ளாட்சித் தேர்தலில் அடிச்சு தூள் கிளப்ப போகிறோம், பாஜகவின் உண்மையான பலத்தை காட்டப் போகிறோம் என மார்தட்டி களமிறங்கிய பாஜக புஷ்வானமாக மாறியுள்ளது. எதிர்பார்த்த அளவிற்கு அக்கட்சியில் வெற்றி பெற முடியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக வார்டு உறுப்பினர் பதவிகளில் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது.
அந்த வகையில் பழைய ஜெயங்கொண்டம், சோழபுரம் பேரூராட்சியில் 3வது வார்டில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் கோபிநாத் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் இது திமுகவுக்கு பெருத்த ஏமாற்றமாக மாறி உள்ளது. இதேபோல் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது, அதில் உள்ள மொத்தம் 200 வாக்குகளில் 162 வாக்குகள் பதிவான நிலையில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் நரேந்திரன் என்பவர் ஒரே ஒரு ஓட்டு மட்டும் பெற்றுள்ளார். இது பவானிசாகர் பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதேபோல கடந்த அக்டோபர் மாதம் கோவையில் நகர்புற உள்ளாட்சி இடைத்த தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பாஜக நிர்வாகி கார்த்திக் என்பவர் ஒரே ஒரு ஓட்டு மட்டும் பெற்றிருந்தார். அது அப்போது பலராலும் ஒத்த ஓட்டு பாஜக என விமர்சிக்கப்பட்டது. அவரது குடும்பத்தில் ஆறு பேர் இருந்தும் அவரது வார்டில் அவருக்கு ஒரே ஒரு வாக்கு மட்டுமே விழுந்தது குறிப்பிடதக்கது. இந்நிலையில் தற்போது மீண்டும் பாஜக வேட்பாளர் ஒருவர் ஒரே ஒரு ஒட்டு பெற்றுள்ளார் எற்பது குறிப்பிடதக்கது.
