தமிழகத்தில் ஆளுநராக இருந்த ரோசய்யா பதவிக்காலம் முடிந்த பின்னர், மகாராஷ்டிர ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ் கூடுதல் பொறுப்புடன் தமிழகத்துக்கும் ஆளுநராகப் பொறுப்பேற்று வந்து சென்றார். ஜெயலலிதா மரணமும் தொடர்ந்து தமிழகத்தில் நிலவிய அரசியல் குழப்பங்களும் முழு நேர ஆளுநரின் தேவையை உணர்த்தியது. 

இதை அடுத்து, தமிழகத்துக்கு முழுநேர ஆளுநர் தேவை என்று எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல ஆளுங்கட்சியிலும் பலர் கோரிக்கை விடுத்தார்கள். ஆனாலும், நெடு நாட்களாக வித்யாசாகர் ராவே நீடித்தார். தமிழகத்தில் நிலவிய அரசியல் குழப்பங்களுக்கு எல்லாம் ஒவ்வொரு முறையும் மும்பையில் இருந்து பறந்து வந்தார். ஓரிரு நாட்கள் தங்கி, பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டதோ இல்லையோ உடனே திரும்பிவிடுவார். 

இத்தகைய சூழலில்தான்,  பன்வாரி லால் புரோஹித் தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்று ஆளுநர் மாளிகையிலேயே தங்கி வருகிறார். அண்மைக் காலமாக ஆளுநர் என்றால் ரப்பர் ஸ்டாம்ப் போல்தான் என்ற கருத்துருவாக்கத்தை உடைத்து வருகிறார்கள் தற்போதைய ஆளுநர்கள். அதற்கு சரியான உதாரணமாகத் திகழ்கிறார் புதுவை துணை நிலை ஆளுநர்  கிரண் பேடி. இப்போதும் நாராயணசாமி தலைமையிலான மாநில அரசுக்கு பெரும் தலைவலியாகவே இருக்கிறார் கிரண் பேடி. 

அப்படி ஒரு நிலையை தமிழக ஆளுநரும் இங்கே ஏற்படுத்துவார் என்று முன்னதாக கூறப்பட்டது.  பன்வாரி லால் புரோஹித்தை நன்கு அறிந்தவர் என்றும், நண்பர் என்றும் குறிப்பிட்டு சுப்பிரமணிய சுவாம் அவர் பற்றிய தன் கருத்தை வெளியிட்டிருந்தார். மிகவும் நேர்மையானவர், சிறந்த நிர்வாகி. ஊழலுக்கு எதிரானவர். முறகேடுகளை சகித்துக் கொள்ளாதவர் என்றெல்லாம் அவரைப் பற்றி சு.சுவாமி கூறியிருந்தார். 

இந்நிலையில் அப்படி ஒரு அவசர நெருக்கடியை தமிழக அரசும் அமைச்சர்களும் அதிகாரிகளும் கூட சந்திக்கின்றனராம். 

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுகிறது. இந்த விழாவின் சிறப்பு அழைப்பாளராக தமிழகத்தின் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்கிறார். இப்படி பல்கலை பட்டமளிப்பு விழாக்களில் ஆளுநர்கள் கலந்து கொள்வது ஒன்றும் ஆச்சரியமான விஷயம் இல்லை, ஆனால் அதைத் தொடர்ந்த அவரது திட்டமிடல்கள்தான் மிகவும் ஆச்சரியகரமான விஷயமாக மாறியுள்ளது. 

ஆளுநர், நாளை மாலை 3.30க்கு மேல், கோவை மாவட்ட அரசு அலுவலகங்களைஆய்வு செய்யப் போகிறார்.  ஆளுநரின் புதிய ஆய்வுத் திட்டத்தின்படி, கோவை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மாவட்ட காவல்துறை ஆணையர், எஸ்.பி மற்றும் இதர முக்கிய அரசு அதிகாரிகள் ஆளுநரைச் சந்தித்துப் பேச நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஆளுநரிடம் தங்கள் துறை ரீதியான நிலவரத்தை விளக்க வேண்டுமாம்.  மேலும், முக்கிய அரசியல் பிரமுகர்களிடமும் மாவட்டப் பணிகள் குறித்து ஆளுநர் விவரங்களைக் கேட்டறியவுள்ளார். 

இப்படி ஆளுநர் திடீர் சோதனையாக அரசு அலுவலகங்களுக்கு வருவதால், தமிழக அரசியலிலும் அரசிலும் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இதுவரை நடந்திராத வகையில், தமிழக ஆளுநர் முதன்முறையாக ஒரு மாவட்டத்தின் அரசுப் பணிகளை களத்தில் இறங்கி ஆய்வு செய்ய உள்ளார். இந்த ஆய்வு குறித்த தகவல், அதிகாரிகள் மத்தியில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தின் முக்கிய அதிகாரிகள் பலர் சிலநாட்களாகவே தூக்கமின்றித் தவித்து வருவதாகக் கூறப்படுகிறது. ‘ஆளுநரின் இந்த திடீர் அறிவிப்பு மாநில சுயாட்சியில் தலையிடுவதாக உள்ளது’ என்கின்றனர் அரசியல் ரீதியான விமர்சனங்களை முன்வைப்போர். 

இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் இந்த திடீர் உத்தரவு காரணமாக அச்சத்தில் தவித்தபடி ஆஸ்திரேலியாவில் இருந்து ஓடோடி வருகிறார் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி. நாளை மாலை ஆளுநர் கூட்டும் கூட்டத்தில் அமைச்சர், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொள்ளவுள்ளனர். எனவே அரக்கப்பரக்க ஓடிவருகிறாராம் வேலுமணி!