ஏ.ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி ஒன்று கடந்த மாதம் 10 ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய அவர் இசை அருங்காட்சியகம் ஒன்று சென்னையில் அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான திட்டம் தம்மிடம் இருப்பதாக கூறினார்.

 

கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு நகரில் இசைக்கான பிரத்யேக அருங்காட்சியகம் இருப்பதாகவும் அதே போன்று சென்னையிலும் அமைக்கப்பட வேண்டும் என்றார். 

எம்.எஸ்.விஸ்வநாதன், டி.எம் சௌந்தரராஜன், கவிஞர் வாலி போன்ற பலரை பெருமை படுத்தும் விதமாக அருங்காட்சியகம் அமைப்பது தேவையான ஒன்று என்று குறிப்பிட்ட அவர், அதற்கான திட்டம் தம்மிடம் இருப்பதாகவும் தெரிவித்தார். அந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் இது குறித்து தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார். இசை அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பாக ஏ.ஆர். ரகுமானிடம் ஆக்கப்பூர்வ திட்டங்கள் இருந்தால் உதவ தமிழக அரசு தயாராக இருப்பதாக தெரிவித்த அவர் அருங்காட்சியகம் அமைக்கவும் அரசு அனைத்து வகையிலும் உதவி செய்யும் என்றார்