வெள்ள பாதிப்புகளுக்கு தமிழக அரசு மத்திய அரசிடம் எந்த உதவியும் கோரவில்லை - அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு
தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் எந்த உதவியும் கேட்கவில்லை. நிர்மலா சீதாராமன் தாமாக முன்வந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேசி தேசிய பேரிடர் மீட்பு படை ஹெலிகாப்டர் உள்ளிட்டவற்றை அனுப்பி வைத்ததாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியில் நடைபெறும் என் மண் என் மக்கள் பயணம் செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திருச்சி விமான நிலைய புதிய முனைய திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி வர வாய்ப்பு உள்ளது. ஆனால் இன்னும் அதிகாரப் பூர்வ அறிவிப்பு வரவில்லை.
வட மாநில தொழிலாளர்கள் குறித்து தி.மு.க வுனர் பல கருத்துக்களை ஏற்கனவே கூறி உள்ளனர். மீண்டும் அது சர்ச்சையாக்கப்படுகிறது. அகில இந்திய அளவில் இந்தி(இந்தியா) கூட்டணியில் உள்ள முரண்பாடுகளை காட்ட பழைய வீடியோவை யாரோ ஒருவர் மீண்டும் பதிவிட்டுள்ளார். தி.மு.க வினர் உத்தரபிரதேசத்தை மோசம் என்றார்கள். ஆனால், இன்று அது பொருளாதாரத்தில் இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. இரண்டாவது இடத்திலிருந்த தமிழ்நாடு மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது.
மழை வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு நிச்சயம் நிவாரணம் வழங்கும். மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து மீள உற்பத்தி திறனை தமிழ்நாட்டில் அதிகப்படுத்த வேண்டும். மழை வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசுதான் காரணம் என தொடர்ந்து மத்திய அரசு மீது குற்றம் சாட்டிக் கொண்டிருந்தால் அடுத்து வரும் வெள்ளத்தில் இருந்து தப்பிக்க முடியாது. மழை வெள்ளம் வருவதற்கு முன்பே தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் எந்த உதவியும் கேட்கவில்லை. நிர்மலா சீதாராமன் தாமாக முன்வந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேசி தேசிய பேரிடர் மீட்பு படை ஹெலிகாப்டர் உள்ளிட்டவற்றை அனுப்பி வைத்தார்.
தமிழ்நாடு அரசு தேவையில்லாமல் மத்திய அரசு மீது பழி சுமத்தி வாய் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் நேரடியாக மழை, வெள்ள பாதிப்புகளை பார்க்க வராவிட்டாலும் அவர் என்ன வேலை செய்ய வேண்டுமோ அதை செய்து வருகிறார். தி.மு.க ஐ.டி விங்க் Go Back Modi என சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள். ஆனால் வணக்கம் மோடி என்பது அதை விட 250 மடங்கு அதிகம் பகிரப்படும். எங்களுக்கும் Go back Stalin என போட தெரியும். ஆனால் அவர் வகிக்கும் பொறுப்புக்கு நாங்கள் மரியாதை தருகிறோம் என்றார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D