அனைத்து அரசு பணிகளிலும் தழிழர்களுக்கு முன்னுரிமை, முன்னெழுத்து, பெயர் முழுவதும் தமிழ் மொழியில் எழுதுவது கட்டாயம், பயின்று பெற்றவர்களைக் கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாட வைப்பது உள்ளிட்ட தமிழக அரசின் அடுத்தடுத்த அறிவிப்புகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவை பதிவு செய்யப்பட்ட கருவிகளுக்கு பதிலாக பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு பாட வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவை பதிவு செய்யப்பட்ட கருவிகள் வாயிலாக இசைக்கப்படுவதாகவும் இதனால் விழாவில் பங்கேற்போர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது உதட்டளவில் கூட பாடுவதில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், எந்தவித தேசப்பற்றோ அல்லது தமிழ் உணர்வோ இல்லாமல் இயந்திரகதியில் எழுந்து நிற்பதாகவும் எந்த நோக்கத்திற்காக தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்கப்படுகிறதோ அந்த நோக்கம் சிதைந்து போவதாக அறியப்படுவதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இனிவரும் காலங்களில் இதற்கென பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்தையும் தேசிய கீதத்தையும் பாடுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு உத்தரவு விடப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழில் பெயர் எழுதும் போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதிடும் நடைமுறையைப் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதில் பள்ளி, கல்லூரி முடித்து சான்றிதழ் பெறும்போதும் முன்னெழுத்துடன் கையெழுத்து தமிழில் இருந்தால் மட்டுமே சான்றிதழ் வழங்கும் நடைமுறையின் கொண்டு வரலாம், மாணவர்களின் சான்றிதழை பெற்றோர் கையொப்பமிட்டு பெறும்போது முன்னெழுத்து மற்றும் கையெழுத்தினை தமிழிலேயே இடம்பெற வேண்டும் எனத் தெரிவிக்கப் பெறலாம். பொதுமக்கள் அதிகம் அணுகும் மாநகராட்சி, நகராட்சி, உள்ளிட அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் அளிக்கும் விண்ணப்பங்களில் முன்னெழுத்துடன் தமிழில் கையொப்பமிடுவதை நடைமுறைப்படுத்தப் பெறலாம் .வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்கள் என அனைத்துத் துறைகளிலும் இதனை நடைமுறைப்படுத்திடலாம். மேலும் அனைத்துத் துறைகளிலும் அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்படும் பெயர்களில் முன்னெழுத்து மற்றும் பெயர்களை முழுமையாகத் தமிழிலேயே பதிவு செய்யப்பட வேண்டும் என ஆணையிடப் பெறலாம் என தெரிவிக்கபட்டது.

மேலும் அண்மையில் அரசுத் துறைகள், மாநில பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களில் 100 சதவீதம் தமிழக இளைஞர்களை நியமனம் செய்ய ஏதுவாக, அனைத்துவித போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழித் தாள் தகுதித் தேர்வாக நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது. அதன் படி, ஆசிரியர் தேர்வுவாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் உள்ளிட்ட பிற தேர்வு முகமைகள் நடத்தும் அனைத்துவித போட்டித் தேர்வுகளுக்கும் இந்த நடைமுறை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ ஆகிய இரு நிலைகள் கொண்ட தேர்வுகளில், தமிழ் மொழித் தகுதித் தேர்வு நடத்தப்படும். குரூப்-3, குரூப்-4 தேர்வுகளில் பொது ஆங்கிலம் நீக்கப்பட்டு, பொது தமிழ் மொழித் தாள் மட்டுமே மதிப்பீட்டு தேர்வாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அனைத்து அரசு பணிகளிலும் தழிழர்களுக்கு முன்னுரிமை, தமிழ் மொழியில் கையொப்பமிடுவதை கட்டாயம், பயின்று பெற்றவர்களைக் கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாட வைக்க வேண்டும் போன்ற தமிழக அரசின் அடுத்தடுத்த அறிவிப்புகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது
