இந்து அமைப்புகள்  விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து, நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க தமிழக அரசு தடை விதித்தது. ஆனால், வழக்கம்போல விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தப்படும் என்று இந்து முன்னணி அறிவித்தது. மேலும் தமிழக அரசுக்கு பாஜகவும் அழுத்தம் கொடுத்துவருகிறது. 
விநாயகர் சிலை வைக்க தமிழக அரசு விதித்த தடைக்கு சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையும் மறுத்துவிட்டது. இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும். தமிழகத்தில் விநாயகர் சிலையை பொது இடங்களில் வைக்க, ஊர்வலம் செல்ல தடை தொடருகிறது. கொரோனாவை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும்.

 
மதம் சார்ந்த விழாக்கள், கூட்டு வழிபாட்டுக்கு நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டும் அரசின் ஆணையை மக்கள் பின்பற்ற அறிவுறுத்தி உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் ஆணைகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் மூலம் விநாயகர் சிலைகளை வைக்க தமிழக அரசு விதித்த தடையில் உறுதியாக உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.