காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நடக அரசு மேல் முறையீடு செய்யவோ அல்லது தீர்ப்பை மதிக்காமல் போகவோ வாய்ப்பில்லை என்றும், இப்பிரச்சனையில் இனி அவர்கள் ஓடவும், ஒளியவும் முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

காவிரி நதிநீர்  பிரச்சினை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் காவிரி நீரை பகிர்ந்து கொள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங் காற்று குழுவையும் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி அந்த இரு அமைப்புகளையும் மத்திய அரசு ஏற்படுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கர்நாடகம், நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன்தான் இந்த இரு அமைப்புகளையும் மத்திய அரசு ஏற்படுத்தி இருக்கவேண்டும் என்று கூறியது.

மேலும்  தமிழ்நாடு , கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கும், ஒழுங் காற்று குழுவுக்கும் தங்கள் உறுப்பினர்களை நியமித்த நிலையில், நீண்ட இழுபறிக்கு பிறகு கர்நாடகம் தனது உறுப்பினர்களை நியமனம் செய்தது.

இதனிடையே  மத்திய நீர்வள ஆணையம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர்  மசூத் உசேன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் நாளை  நடைபெறுகிறது.

இந்த நிலையில், காவிரி பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் பெங்களூருவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.


2 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது. 

இது குறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி விவகாரத்தில் உச்சநிதிமன்றம் தெளிவான ஒரு தீர்ப்பை கொடுத்துள்ளது. அதில் முக்கியமானது அந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுக முடியாது என்பதுதான்.

இதில் எல்லாம் முடிந்துவிட்டது, இனி தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடகா அரசு மாதாமாதம் காவிரியில் திறந்துவிட்டே ஆக வேண்டும். ஆணையம் அந்த வேலையை பார்த்துக் கொள்ளும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.