தமிழ் நாட்டில் இன்னும் 10 நாட்களில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  தெரிவித்துள்ளார். 
கிருஷ்ணகிரி மாவட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். “மற்ற மாவட்டங்களைவிட கிருஷ்ணகிரியில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகள் மூலம் இதுவரை 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உதவிகள் செய்யப்பட்டுள்ளன.

 
கொரோனாவை குணமாக்க மருந்துகள் கண்டுபிடிக் கப்படவில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனாவை குணப்படுத்த மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. ஆகஸ்ட் 15-க்கு முன்பாக மருந்து வரும் என்று எதிர்பார்க்கிறோம். நிச்சயமாக வரவேண்டும். கொரோனாவை ஒழிக்க மருந்து கண்டுபிடித்தால்தான் முடியும். தமிழகத்தில் கொரோனா ஒழிப்பு பணியில் எதிர்க்கட்சிகள் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு தருகிறார்கள் என தினமும் நீங்களே பார்க்கிறீர்கள்.
கொரோனாவைக் கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு சுய கட்டுப்பாடு அவசியம். அதேபோல எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நாட்டிலேயே கொரோனா பரிசோதனை அதிகம் செய்த மாநிலம் தமிழ்நாடுதான். தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட சென்னையில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இன்னும் 10 நாட்களில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” என்று  தெரிவித்தார்.