தமிழகத்தில் பாஜக ஏன் தோற்றது என்பது குறித்து கட்சி நிர்வாகிகளின் கருத்தை அறிய தொகுதி வாரியாக கட்சி கூட்டங்களுக்கு தமிழக பாஜக ஏற்பாடு செய்துள்ளது.
 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக்த்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றது. 5 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி ஐந்திலும் தோல்வியைச் சந்தித்து. அதிமுக கூட்டணி தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. தமிழகத்தில் ஏன் தோல்வி ஏற்பட்டது என்பது குறித்து அறிக்கை அனுப்புமாறு பாஜக கட்சி மேலிடம் மாநில தலைமைக்கு உத்தரவுப் பிறப்பித்திருந்தது. இதன்படி தோல்வி குறித்து ஆராய தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளின் கூட்டங்களுக்கு தமிழக பாஜக ஏற்பாடு செய்துள்ளது.


இதுகுறித்து தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: “நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தேசிய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்று மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி ஆட்சியில் அமர்ந்துள்ளார். இந்த மிகப் பெரிய மகிழ்ச்சியிலும், தமிழகத்தில் ஓரிடம்கூட  வெற்றி பெற முடியாதது மிகுந்த வருத்தமளிப்பதாகவே உள்ளது. ஆனாலும் மிகப்பெரிய சோதனைகளை கடந்துதான் ஒவ்வொரு மாநிலங்களிலும் வெற்றியை பெற்றுள்ளோம் என்பதே யதார்த்தம்.

 
ஆகையால் நம்மை நாம் சுயபரிசோதனை செய்யவும் வருங்காலங்களில் தமிழகத்தில் வெற்றி பெற்றிட, மண்டல் பொது செயலாளர்கள், மண்டல் தலைவர்கள் அதற்கும் மேற்பட்ட காரியகர்த்தர்களுடன் கோட்டத்தில் ஒருநாள் சந்தித்து நம்முடைய கருத்துக்களை முன் வைப்பதற்கான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் நானும் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகமும் கலந்து கொள்ள உள்ளோம். காஞ்சிபுரத்தில் இன்று இக்கூட்டம் நடைபெறுகிறது. 13-ம் தேதி மதுரை, 14-ம் தேதி கன்னியாகுமரி, 17-ம் தேதி சிதம்பரம், 18-ம் தேதி சேலம், 19-ம் தேதி ஈரோடு, 20-ம் தேதி கோவை, 24-ம் தேதி தருமபுரி, 25-ம் தேதி வேலூர், 27-ம் தேதி திருச்சி, 28-ம் தேதி தஞ்சாவூர், 29-ம் தேதி ராமேஸ்வரம் கோட்டத்திலும் கூட்டம் நடைபெறும்.” என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.