முத்துராமலிங்க தேவரின் 113-வது பிறந்தநாள், 58-வது குருபூஜையையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவருடைய நினைவிடத்தில் தமிழக பாஜக தலைவர் முருகன் அஞ்சலி செலுத்தினா். பின்னர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதுதான் நாடாளுமன்ற வளாகத்தில் முத்துராமலிங்க தேவருக்கு சிலை வைக்கப்பட்டது. தமிழக ஆளுநர் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். எனவே ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.


ஆட்சிக்கு வர வேண்டும் என்ற மு.க.ஸ்டாலின் கனவு பலிக்காது. அவருடைய கனவு கலைந்துவிடும். அதனால்தான் ஆள் வைத்து பின்னால் இருந்து பேச வைக்கிறார். பாஜகவின் வேல் யாத்திரையைக் கண்டு மு.க.ஸ்டாலின் பயந்துபோய்விட்டார். தமிழகத்தில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது அவருடைய விருப்பம். கட்சி தொடங்கினால் நாங்கள் வரவேற்போம்” என்று எல்.முருகன் தெரிவித்தார்.