உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணியெல்லாம் வேலை செய்யாது என்று தமிழக பாஜக மூத்தத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளன. பொங்கல் பண்டிகை பிறகு தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்மரம் காட்டிவருகின்றன. நாடாளுமன்றத் தேர்தலில் உருவாக்கப்பட்ட கூட்டணி தொடரும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். என்றபோது மேயர், நகராட்சித் தலைவர்கள் பதவியைக் கூட்டணி கட்சிகள் இப்போது கேட்காகம் இருப்பதற்காக இந்தப் பதவிகளை கவுன்சிலர்கள் மூலம் தேர்வு செய்யும் வகையில் அவசர சட்டத்தை அதிமுக கொண்டுவந்துள்ளது.


இந்த அவசர சட்டத்தை பாஜக விரும்பவில்லை. கூட்டணி கட்சிகளுக்கு தலைவர் பதவி இடங்களை தராமல் இருக்கவே அதிமுக அவசர சட்டத்தைக் கொண்டுவருவதாக தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் குற்றம் சாட்டினார். இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பொன். ராதாகிருஷ்ணனும் புதிய கருத்தைத் தெரிவித்துள்ளார்.


 “உள்ளாட்சித் தேர்தலில் லட்சத்துக்கு அதிகமான வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் விருப்பம். உள்ளாட்சித் தேர்தலுக்கென இதுவரை கூட்டணி எதுவும் அமைக்கப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணியா என்பதை கட்சியின் தேசியத் தலைமைதான் முடிவு செய்யும். ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணியெல்லாம் வேலை செய்யாது. இதை நான் அனுபவப்பூர்வமாக பார்த்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 
இதன்மூலம் உள்ளாட்சித் தேர்தலை தனித்து எதிர்கொள்ள தமிழக பாஜக  தயாராகிவருவதாகத் தோன்றுகிறது. வேலூர் நாடாளுமன்றத் தேர்தல்; விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் பாஜகவை தள்ளிவைத்துவிட்டு அதிமுக வேலை பார்த்தது. இதன்மூலம்  இந்த இரு தேர்தல்களிலும் அதிமுக பலனடைந்ததாக பொதுக் கருத்து அதிமுகவில் நிலவிவருகிறது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பாஜகவில் அதிமுகவுக்கு எதிரான கருத்துகளை அக்கட்சியின்  தலைவர்கள் முன்வைக்கத்தொடங்கியுள்ளனர்.