பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவிட்டவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக பாஜகவின் முன்னாள்  தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்,
பெரியாரின்  நினைவு நாளையொட்டி தமிழக பாஜகவின் ஐ.டி. விங், பெரியார் பற்றி பதிவிட்டிருந்த ட்விட்டர் சர்ச்சையானது. பெரியாரை இழிவுப்படுத்தியதாக தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பாஜகவுக்கு எதிராகக் கொந்தளித்தனர். பாஜக கூட்டணியில் உள்ள அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோரும் பாஜகவை கண்டித்தனர். இதனையடுத்து அந்தப் பதிவை பாஜக நீக்கியது. இந்த விவகாரத்தில் கோவையில் தந்தை பெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.


இந் நிலையில் அந்த சர்ச்சைக்குரிய பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பாஜகவின் முன்னாள்  தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சி.பி.ஆர்., “இறந்தவர்களை விமர்சனம் செய்யும் பண்பாடு பாஜகவில் கிடையாது. சர்ச்சைக்குரிய டிவிட்டர் பதிவு குறித்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்து நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்தார்.