TN assembly will organise on june
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. பின்னர், நிதியமைச்சர் ஜெயகுமார், பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன்பின்னர் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைறவில்லை.
இதற்கிடையில், கடந்த ஏப்ரல் 10ம் தேதி ஆர்கே நகரில் நடைபெற இருந்த இடைத் தேர்தல் காரணத்தால் சட்டசபை கூட்டம் மார்ச் 24ம் தேதி முடிவடைந்தது.
தேர்தலுக்கு பிறகு சட்டசபை மீண்டும் கூடும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஆர்.கே.நகர் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரத்தால், தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்தது. அதன் பிறகு 40 நாட்கள் ஆன பிறகும் சட்டசபை இதுவரை கூட்டவில்லை.
மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்த சட்டசபையை மீண்டும் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 19ம் தேதி சபாநாயகரிடம் மனு கொடுத்தார். கவர்னருக்கும் கடிதம் எழுதினார்.
ஆனால் சட்டசபை கூட்டப்படாமல் கடந்த மே 11ம் தேதி கூட்டத்தொடரை இறுதி செய்து ஆணை வெளியிடப்பட்டது. இதற்கு தி.மு.க கடும் கண்டனம் தெரிவித்தது.
தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் வறட்சி, குடிநீர் கட்டுப்பாடு, மதுக்கடைகளுக்கு எதிரான பெண்கள் போராட்டம், விவசாயிகள் தற்கொலை நீட் தேர்வு, போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் உள்பட பல பிரச்சனைகள் நிலுவையில் உள்ளதால் சட்டசபையை உடனடியாக கூட்ட வேண்டும் என்று திமுக உள்பட அனைத்து கட்சியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, செய்தியாளர்களிடம் பேசியபோது, விரைவில் சட்டசபை கூடும் என தெரிவித்தார். ஆனால், அதற்கான தேதியை கூறவில்லை.
இதுகுறித்து, அதிமுக அமைச்சர்கள் சிலர் கூறுகையில், வரும் ஜூன் 8ம் தேதி சட்டசபை கூடுவதற்கான வாய்ப்பு உள்ளது. சுமார் 25 நாட்களுக்கு மேல் கூட்டம் நடைபெறும். இதில், உள்ளாட்சி தேர்தலில் அமல்படுத்த உள்ள எஸ்.சி.எஸ்.டி. பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டு மசோதா உள்பட பல்வேறு முக்கிய மசோதாக்கள் கொண்டு வரப்பட உள்ளது என தெரிவித்தனர்.
