திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் நாடியா மாவட்டம் கிருஷ்ணாகஞ்ச்  தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சத்யஜித் பிஸ்வாஸ்.

இவர் நேற்று மாலை மஜ்தியா அருகே ஃபுல்பாரி என்ற இடத்தில் நடந்த சரஸ்வதி பூஜையில் பங்கேற்றார். அப்போது முதல் வரிசையில் அமர்ந்திருந்த பிஸ்வாசை  அருகில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமாரி சுட்டனர். அங்கிருந்தவர்கள் பதற்றமடைந்த நேரத்தில், அந்த கும்பல் தப்பியோடியது. 

ஆபத்தான நிலையில் பிஸ்வாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, இந்த படுகொலைக்கு பாஜக தலைவர் முகுல் ராய் காரணம் என நாடியா மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் கவுரிசங்கர் குற்றஞ்சாட்டினார்.

பிஸ்வாஸ் தனது தொகுதியில் ஒரு பிரபலமான அரசியல்வாதி. சமூகம் சார்ந்த குழுக்களை வழிநடத்தி வந்த பிஸ்வாஸ் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு சவாலாய் அமைந்தவர் என தெரிகிறது.

இதனால்  பிஸ்வாஸ் சுட்டுக கொல்ல்ப்பட்டதற்கு பாஜக தான் காரணமாக இருக்கலாம் என மேற்குவங்கம் ஆளும் திரினாமுல் காங்கிரஸ்  குற்றம்நாட்டியுள்ளது. 

ஆனால்  இச்சம்பவத்திற்கும், பாஜக பிரமுகர்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் தெரிவித்துள்ளார். மேலும் கொலை செய்த மர்ம நபர்களை விரைவில் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். தேவையெனில் சிபிஐ விசாரணைக்கு ஆணை இட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.