இதுநாள் வரை வன்னியர் சமுதாயத்தை தங்களின் சுயநலத்திற்காகவும், குடும்பத்திற்காகவும் பயன்படுத்திக் கொண்டவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்பது புலனாகிறது. என டி.கே.எஸ். இளங்கோவன் ராமதாசுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இராமசாமி படையாட்சியாருக்கு மணிமண்டபம் அமைக்கப் போவதாக விக்கிரவாண்டியில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்திருக்கிறார். இராமசாமி படையாட்சியருக்கு கடலூரில் மணிமண்டபம் அமைக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராக இருக்கிறது.

இந்த உண்மை கூட தெரியாமல் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். வன்னியர் தலைவர் குறித்த நிகழ்கால நிலவரம் கூட தெரியாத இவர் தான் வன்னியர் நலனைக் காப்பாற்றப் போகிறாராம். இது தான் காலக் கொடுமை போலிருக்கிறது! என தனது ட்விட்டர் பக்கத்தில் ராமதாஸ் விமர்சித்திருந்தார்.

இது தொடர்பாக திமுக செய்தித்தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்ட பதிலடி அறிக்கையில்; திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்டாலின், விக்ரவாண்டி தொகுதி பிரச்சாரத்தில் ஆற்றிய உரையில், "வன்னியர் இனத்திற்காகக் குரல் கொடுத்து உயிர் நீத்த தியாகிகளுக்கு கழக ஆட்சி அமைந்தவுடன் மணி மண்டபம் அமைப்போம் என்ற அந்த உறுதிமொழியை நான் தந்திருக்கிறேன்" என்று கூறியது தெளிவாக இன்றைய (13.10.2019) முரசொலி பத்திரிக்கையில் பக்கம் 7ல் வெளிவந்துள்ளது.

மேலும் "அதே உணர்வோடுதான் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்த "ஏ.ஜி" என்று அந்நாளில் எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட ஏ. கோவிந்தசாமி அவர்களுக்கு ஒரு மணி மண்டபம் அமைக்க வேண்டும். காரணம், ஏ.ஜி. அவர்களும் இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்காகப் பாடுபட்டவர்- பணியாற்றயவர்" என்ற ஸ்டாலின் பேச்சும் முரசொலியில் தெளிவாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 

ஆனாலும் முரசொலி பத்திரிக்கையில் வெளிவந்ததை மறைத்து விட்டு, பத்திரிக்கை செய்தியில் தவறுதலாக வெளி வந்துள்ள "Typographical Error"-ஐ வைத்துக் கொண்டு, ஸ்டாலின் பிரச்சாரத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடாத, ராமசாமி படையாச்சியாருக்கு மணிமண்டபம் என்பதைக் குறிப்பிட்டு, சிலர் அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்வதிலிருந்தே "வன்னியர்களுக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கும்", "ஏ.ஜி. என்று அன்போடு அழைக்கப்படும் திரு. ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கும்" மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற கழகத் தலைவரின் அறிவிப்பை- இதுநாள் வரை வன்னியர் சமுதாயத்தை தங்களின் சுயநலத்திற்காகவும், குடும்பத்திற்காகவும் பயன்படுத்திக் கொண்டவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்பது புலனாகிறது. இவ்வாறு டி.கே.எஸ். இளங்கோவன் பதிலளித்துள்ளார்.