கூவத்தூரில் அடைக்கப்பட்டிருந்த போது தனது சொந்த சித்தியின் இறுதி சடங்கில் கூட கலந்து கொள்ளாமல் கட்சிதான் முக்கியம் என இருந்தவர் அதிமுக சசிகலா அணியின் எம்எல்ஏ குணசேகரன்.

திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக சார்பில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் குணசேகரன்.

இவர் தனி ஒருவனாக மிகபெரிய மேடை அமைத்து ப்ளெக்ஸ் போர்டுகளில் தன்னுடைய தொகுதியின் குறைகளை அச்சிட்டு அருகில் வைத்து கொண்டு அமர்ந்து விட்டார்.

இதனால் திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுகவினர் மட்டுமின்றி தலைமையும் அதிர்ச்சி அடைந்துள்ளது. 

எம்எல்ஏ ஒருவர் தனது தொகுதியில் தடைபட்டுள்ள ஒரு வேலையை செய்ய வேண்டுமானால் எங்கு யாரை பிடித்தால் அது நிறைவேறும் என்பதை நன்கு தெரிந்து வைத்திருப்பார். 

அந்த வகையில் திருப்பூர் தெற்கு குணசேகரனுக்கும் நன்கு தெரியும் தன் தொகுதிக்கு தேவையானவற்றை நேரில் சென்று கேட்டு வாங்குவதற்கு. ஆனால் அப்படி நேரில் சென்று அழுத்தம் கொடுக்காமல் தொகுதியில் உண்ணாவிரதம் அமர்ந்துள்ளது அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது.

திருப்பூர் தெற்கு தொகுதி மக்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்தாலும், இது எடப்பாடிக்கு பழனிச்சாமிக்கு எதிராக அவரது ஆதரவு எம்எல்ஏ ஒருவர் போர்க்கொடி தூக்கி இருப்பதையே வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது.

ஏற்கெனவே தனது சித்தியின் இறுதி சடங்குக்கு செல்லவில்லை என்ற சர்ச்சையில் சிக்கியவர் இந்த குணசேகரன்.
அமைச்சர் பதவியை எதிர்பார்த்திருந்த இவருக்கு சமீப காலமாக அதிமுகவில் நடைபெறும் பின்னடைவு நிகழ்வுகள் ஏமாற்றத்தை அளித்ததாம்.

தனது அடுத்த நகர்வுக்கு முதல் படியாக மக்கள் பிரச்னையை கையில் எடுத்து தன்னந்தனியாக அமர்ந்து விட்டார் குணசேகரன்.

ஏற்கனவே பெங்களுரு சிறைவாசம், கோடிக்கணக்கில் பணம் செலவு செய்தும் தேர்தல் ரத்து, இரட்டை இலை சின்னம் முடக்கம், எடப்பாடி பழனிச்சாமியின் அடுத்தடுத்த உள்ளடி வேலைகள், ஐடி ரெய்டு  என கதிகலங்கி போயிருக்கும் அதிமுக தலைமைக்கு குணசேகரனின் இந்த செயல் பேரிடியாக இறங்கியுள்ளது.

ஏற்கெனவே சூலூர் எம்எல்ஏ கனகராஜ் அணி மாறி விடுவேன் என அடிக்கடி மிரட்டிக்கொண்டிருக்கிறார். “நான் டைப்பான ஆளு.. தேவைப்பட்டால் எதிரணிக்கு போய் விடுவேன்” என வெளிப்படையாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் குணசேகரனும் இப்படி அரசியல் ஸ்டன்ட் அடிக்க ஆரம்பித்துள்ளதால் ஓபிஎஸ் பக்கம் சாய்ந்து விடுவார் என்றே கூறப்படுகிறது.