Tirupur Dharmapuri Pudukottai District AIADMK executives removed

அதிமுகவின் கொள்கை, குறிக்கோள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டு வரும் அதிமுக நிர்வாகிகளை கட்சி தலைமை கடந்த சில நாட்களாகவே நீக்கி அறிவித்து வருகிறது. இந்த நிலையில் திருப்பூர், தருமபுரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிமுகவின் கொள்கைக்கு எதிராக செயல்பட்ட 100-க்கும் மேற்பட்டோரை நீக்கி இன்று அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், டிடிவி தினகரன் வெற்றி பெற்றதை அடுத்து தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற தினகரனுக்கு வேலூர் எம்.பி. செங்குட்டுவன் வாழ்த்து தெரிவித்தார். இதனால் கட்சி தாவல் தொடரும் என்று கூறப்பட்டது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் தோல்வி குறித்து, முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் நீக்கப்பட்டு வருகின்றனர்.

டிடிவி தினகரன் ஆதரவாளர்களான 4 மாவட்ட செயலாளர்களை பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். வட சென்னை, வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து வெற்றிவேல் நீக்கம் செய்யப்பட்டார். அதிமுக செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நாஞ்சில் சம்பத், சி.ஆர்.சரஸ்வதி மற்றும் வி.பி. கலைராஜன் உள்ளிட்ட பலர் நீக்கப்பட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து தினகரன் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து நேற்று அதிரடியாக நீக்கப்பட்டனர். இந்த நிலையில், இன்று, திருப்பூர், தருமபுரி, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரை அதிமுக தலைமை கழகம் நீக்கி அறிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 65 நிர்வாகிகளும், தருமபுரி மாவட்டத்தில் இருந்து 19 பேர் அடைப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 48 பேரும் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை கழகம அறிவித்துள்ளது. அதிமுகவின் கொள்கை, குறிக்கோள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.