திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தலைமுடியை ஏலம் விட்டதில் தேவஸ்தானத்துக்கு 7 கோடியே 13 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப பல்வேறு காணிக்கைகளை வழங்குகின்றனர். அதில் உணர்வுப்பூர்வமான ஒன்றாக கருதப்படுவது முடி காணிக்கையாகும்.

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் செலுத்திய தலைமுடி 6 ரகங்களாக  பிரிக்கப்பட்டு ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருப்பதியில் உள்ள தேவஸ்தான மார்க்கெட்டிங் துறை அலுவலகத்தில் நேற்று மாலை ஆன்லைனில் தலைமுடி ஏலத்தில் வைக்கப்பட்டது.

இதில், 31 அங்குலத்திற்கு மேல் உயரமுள்ள முதல் ரக தலைமுடி ஒரு கிலோ 22 ஆயிரத்து 497 என 1200 கிலோ 2. 69 கோடிக்கு ஏலம் போனது. 

2வது ரகம் ஒரு கிலோ 17 ஆயிரத்து 224 என 2400 கிலோ தலைமுடி 4. 13 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது. 3வது ரகம் ஒரு கிலோ 2,834 என 100 கிலோ தலைமுடி 2. 98 லட்சத்துக்கும், 5வது ரகம் ஒரு கிலோ 36 என 30,000 கிலோ தலைமுடி 10. 80 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது. 6வது ரகமான வெள்ளை நிற தலைமுடி ஒரு கிலோ 5,466 என 300 கிலோ தலைமுடி 16. 39 லட்சம் என மொத்தம் 34 டன் தலைமுடி விற்பனை செய்யப்பட்டதன் மூலம் 7 கோடியே 13 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

இதில், 4வது ரகம் தலைமுடி எதுவும் விற்பனை செய்யப்படவில்லை என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.