கொரோனா வைரஸூக்கு எதிராக தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் வரை முகக்கவசமும், சமூக இடைவெளியுமே ஒரே மருந்து என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித குலத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. இந்நிலையில், கொரோனாவுக்கு இதுவரை இந்தியாவில்  4,90,401 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 1,89,463 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,85,636 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,301 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் தனிமனித இடைவெளி, , சோப்பு போட்டு கைகளை தவறாமல் கழுவுதல், முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. 

இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, காணொலி காட்சி மூலம் உத்தரபிரதேசத்தின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த கிராமவாசிகளுடன் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத வரை, தொற்றுநோயைத் தடுப்பதற்கான ஒரே வழி, தனிப்பட்ட சுகாதாரத்தை நன்கு பேணுதல், சோப்பு போட்டு கைகளை தவறாமல் கழுவுதல், வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முகக்கவசத்தால் வாயை மூடுவது, மற்றும் மிகவும் முக்கியமானது ஆறு அடி தூரம் சமுக இடைவெளியை கடைபிடிப்பது என்று அவர் கூறினார். 

மேலும், முகக்கவசத்தை பயன்படுத்துவது எப்படி என்பதை தனது சால்வையின் மூலம் செய்து காட்டினார். கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடி வரும் உத்தர பிரதேச அரசின் முயற்சிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.