டெல்லி மேற்குப் பகுதியில் 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திகார் கிராமத்தில் 53 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த ஜெயில் ஆசிய அளவில் பெரியது. இந்தச் சிறை வளாகத்தில் ஒன்பது மத்திய சிறைச் சாலைகள் உள்ளன. சிறைச்சாலை எண் 1-ல் உள்ள வார்டுகள் மிகவும் பிரமாதமாக பராமரிக்கப்படுவதைப் பாராட்டி, மாடல் வார்டுக்கான ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் பெற்றுள்ளது. இந்த ஆவது வார்டில் தான் 2 ஜி வழக்கில் ஆ.ராசா அடைக்கப்பட்டிருந்தார். இங்குள்ள ஜெயில் காம்பளெக்ஸ் நான்கில்தான் வி.ஐ.பி,க்களை அடைத்து வைப்பார்கள். 

ஜீன்ஸ் பேன்ட் தவிர வேறு எந்த ஆடைகளையும் கைதிகள் அணியலாம். கைதிகள் அவரவர் உடைகளை அவரவர்களே துவைத்துக் கொள்ள வேண்டும். இங்கு ஒரு ஸ்பெஷல் கேன்டீன் இருக்கிறது. இங்கே கொரிக்கும் அய்ட்டங்கள் அனைத்தும் கிடைக்கும். மாதம் நாலாயிரம் ரூபாய் வரை செலவு செய்யலாம். இந்த தொகையைக் கொடுத்து டோக்கன் வாங்கி செல்லில் வைத்துக் கொள்ளலாம். ஹை ரிஸ்க் வார்டில் இருப்பவர்கள் இந்த கேன்டீனுக்குச் செல்ல அனுமதியில்லை. 

மொத்தமாக அடைத்து வைத்து இருக்கும் செல்லின் ஒரு மூலையில் இண்டியன் வகை டாய்லெட் இருக்கும். அதைத்தான் தினப்படி கைதி பயன்படுத்த வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. இங்கு கைதிகளுக்கு டால் ரொட்டி, ராஜ்மா சாவல், கடி சாவல் சப்ஜி போன்ற உணவுகள்தான் தருவார்கள். தினமும் இரண்டு வேலைதான் சாப்பாடு. நான்வெஜ் கிடையாது. கைதியின் இன்ஷியலை வைத்து வாரத்தில் இரண்டு நாட்கள் பார்வையாளர்களை சந்திக்க அனுமதிக்கிறார்கள். சந்திப்பு நேரம் அரை மணி நேரம் மட்டுமே. பார்வையாளர்கள் அறையில் ஐம்பது மைக்குகள் இருக்கும். சந்திக்க வருபவருக்கும் கைதிக்கும் இடையில் இடைவெளி இருக்கும். ஒரே நேரத்தில் இங்கிருந்து ஐம்பது பேர்கள் மைக்கில் எதிர்புறம் உள்ள கைதிகளிடம் பேசுவார்கள் கூச்சல், குழப்பமாகத்தான் இருக்கும்.

எப்போதும் மூன்று அடுக்கு பாதுகாப்பு வளையங்களில்தான் இந்த திகார் சிறைச்சாலை இருக்கும். உள்வட்டப் பாதுகாப்புகளை டெல்லி யூனியன் பிரதேச சிறைத்துறை போலீசாரும், இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர் வெளிவட்ட பாதுகாப்புப் பணியிலும் இருக்கிறார்கள். கொசுக்கடியும், வெயில் காலத்தில் அனல் கக்கும் வெயிலாலும் பலருக்கும் உடலில் கொப்புளங்கள் ஏற்படும். அனைத்துக் கைதிகளும் ஒரே மாதிரி தான் நடத்தப்படுவார்கள். கனிமொழி இங்கு 2ஜி வழக்கில் சிறைச்சாலை எண்- 6 வார்டில் இருந்துள்ளார். அதே போல டி.டி.வி.தினகரனும் இதே சிறைச்சாலையில் இருந்துள்ளார். 

விஐபி- சாதாரண கைதி என வசதிகளுக்கு எந்த பாரபட்சமும் கிடையாது. விஐபிகள் தனியாக அடைத்து வைக்கப்படுவார்கள். அவ்வளவே. அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் வழக்குத் தொடரப்படுவர்களுக்கு இந்த சிறைச்சாலையே ஒதுக்கப்படும். காரணம் மனதளவிலும், உடலளவிலும் அவர்களை சோர்வடையச் செய்வதே இதன் நோக்கம். இந்தக் கொடுமைகளுக்கு பயந்து கொண்டு தான் தன்னை திஹார் சிறைச்சாலைக்கு அனுப்ப வேண்டாம் என்றும், சி.பி.ஐ, அமலாக்கத்துறை காவலுக்கு அனுமதிக்குமாறும்  நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்து வருகிறார் மத்திய முன்னாள் அமைச்சரான ப.சிதம்பரம்.  

இந்த சிறையில் அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் 11 நாள் அடைக்கப்பட்டு கொடுமைகளை அனுபவித்திருக்கிறார்.