இமாச்சலில் எங்க ஆட்சி.. பாஜகவுக்கு திகில் காட்டும் காங்கிரஸ் - இந்தியா டுடே கருத்து கணிப்பு சொல்வது என்ன?
நடந்து முடிந்துள்ள இமாச்சலப் பிரதேச தேர்தலில் ஆட்சி அமைப்பது பாஜகவா ? அல்லது காங்கிரஸ் கட்சியா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த நவம்பர் 12 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தமுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளிலும் பாஜகவும் காங்கிரஸும் போட்டியிட்ட நிலையில், ஆம் ஆத்மி 67 இடங்களிலும், பிஎஸ்பி 53 இடங்களிலும், ராஷ்டிரிய தேவபூமி கட்சி 29 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 11 இடங்களிலும் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியது.
பாஜக, காங்கிரஸ் மட்டுமல்லாமல் ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சிகளும் இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் போடியிட்டது. இந்த தேர்தலில் 65.92 சதவீத வாக்குகள் பதிவானது. இமாச்சல பிரதேசத்தில் பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி வரும் மாநிலத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக வெற்றியைப் பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க..பாஜகவுக்கு பின்னடைவு.. டெல்லி மாநகராட்சியை கைப்பற்றுகிறது ஆம் ஆத்மி கட்சி - கருத்துக்கணிப்பில் புது தகவல் !
டைம்ஸ் நவ் சார்பில் ஈடிஜி - டிஎன்என் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 38 இடங்களையும், காங்கிரஸ் 28 இடங்களையும் ஆம் ஆத்மி ஒரு இடத்தையும் கைப்பற்றாது என்று தெரிய வந்துள்ளது. இதேபோல் ஜன் கி பாத் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 32 முதல் 40 இடங்களையும், காங்கிரஸ் 27 முதல் 34 இடங்களையும் மற்றவர்கள் 2 இடங்களையும் பிடிப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி ஒரு இடத்தையும் பிடிக்காது என்று தெரிவித்துள்ளது. இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 24 முதல் 34 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 30 முதல் 40 இடங்களும் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. பி-மார்க் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 34 முதல் 39 இடங்களையும், காங்கிரஸ் 28 முதல் 33 இடங்களையும், ஆம் ஆத்மி ஒரு இடத்தையும் பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது.
இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக்கணிப்பில் மட்டும் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கருத்துக்கணிப்பில் கூறியதை போல, இமாச்சல பிரதேசத்தில் ஆட்சி அமையுமா ? அதிசயம் ஏதாவது நிகழுமா என்பதை டிசம்பர் 8ம் தேதி வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படிங்க..குஜராத்தில் ஆட்சியை கைப்பற்றப் போவது யார்? வெளியானது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!!