Asianet News Tamil

நாலு காசு சம்பாதிக்கவே ஊழல் கட்சிகளில் சேருகிறார்கள்.. ரஜினி ரசிகர்களை டார் டாராக கிழித்த ‘துக்ளக்’!

திமுக, அதிமுக ஊழல் கட்சிகளில் சேர்ந்து வட்டச் செயலாளர், வார்டு செயலாளர் ஆனால்கூட நாலு காசு சம்பாதிக்கலாம் என்று கணக்குப்போட்டுதான் இக்கட்சிகளில் ரஜினி ரசிகர்கள் சேர்ந்து வருவதாக ‘துக்ளக்’ பத்திரிகையில் மிகக் காட்டமாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
 

Thuglak attacked Rajini fans on joins dmk. admk issue
Author
Chennai, First Published Jan 30, 2021, 9:40 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படியும் கட்சி தொடங்கி ரஜினிகாந்த் போட்டியிடுவார் என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கொரோனா பரவல், உடல்நலம் பாதிப்பு போன்றவற்றை காரணம் காட்டி தான் அரசியலுக்கு வரவில்லை என்று ரஜினிகாந்த் அறிவித்துவிட்டார். இதனால், ரஜினி ரசிகர்கள் திமுக, அதிமுகவில் இணைந்து வருகிறார்கள். ரஜினி ரசிகர்கள் திமுக, அதிமுகவில் இணையும் நிலையில், இது தொடர்பாக துக்ளக்கில், அதை விமர்சித்து கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.


அதில், “ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்தாலும் அறிவித்தார். இதுதாண்டா சமயம் என்று, அவரது ரசிகர் மன்றத்தினர் படை படையாக, திமுக, அதிமுகவில் சேர்ந்துவருகின்றனர். சமீபத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் திமுகவில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்துள்ளனர். எந்த ஊழலை ஒழிக்கவேண்டும் என்று ரஜினிகாந்த் நினைத்தாரோ, அந்த ஊழலின் பிறப்பிடமான திமுகவிலேயே அவரது ரசிக சிகாமணிகள் சேர்ந்தது சிலருக்கு ஆச்சரியமாக கூட இருக்கலாம். இதில் அச்சர்யமென்ன வேண்டிக் கிடக்கிறது.
ரஜினி வேண்டுமானால் தேசியவாதியாக, ஆன்மீகவாதியாக, அரசுக்கு ஒழுங்காக வரி செலுத்தும் நேர்மையாளராக இருக்கலாம். ஆனால், அவருடைய ரசிகர்கள் ஒன்றும் காமராஜ், கக்கன் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரர்களல்ல. ‘தலைவா வா.. தலைமையேற்க வா.., இப்போது இல்லையென்றால் எப்போதுமே இல்லை’ என்று விதிவிதமாக ஆளுயர போஸ்டர்களையெல்லாம் ஊருக்கு ஊர் அச்சடித்து ஒட்டிய ரஜினி ரசிர்கள் ஒன்றும் தியாகத் திருவுருக்கள் அல்ல. எந்த ஆதாயத்தையும் எதிர்பார்க்காமலா இதையெல்லாம் அவர்கள் செய்திருப்பார்கள்? நல்ல வேளையாக ரஜினி தப்பித்தார்.


எல்லா கட்சிக்காரர்களையும் போலத்தான் அவர்களுக்கும் அரசியல் என்பது பணம் பண்ணுற வழி. அதனால்தான் இத்தனை அவசர அவசரமாக கட்சிகளில் இணைந்துவருகிறார்கள். சர்காரியாக கமிஷனால் கூறப்பட்ட ஊழல்கள், 2ஜி ஊழல்கள், நில அபகரிப்புகள் என்று சகல தகிடுதத்தங்களிலும் கைதேர்ந்த திமுக, உச்ச நீதிமன்றத்தால் தண்டனைக்குள்ளான மறைந்த ஜெயலலிதா, சசிகால இத்யாதிகளைக் கொண்ட அதிமுக என்று இப்படி ஊழல் கட்சிகளைத் தேடிப் போய்ச் சேர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? இந்த ஊழல் கட்சிகளில் சேர்ந்து ஏதோ வட்டச் செயலாளர் வார்டு செயலாளர் என்று ஆனால்கூட நாலு காசு சம்பாதிக்கலாம் என்று கணக்குப்போட்டுதான் பிற கட்சிகளில் சேர்ந்துவருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
சுதந்திரப் போராட்டக் காலத்தில் நாட்டுக்காக சொத்து சுகங்களை இழந்த மாதிரி, இந்த 2021-லும் எல்லாவற்றையுஃம இழந்து நிற்க ரஜினி ரசிகர்கள் என்ன அசட்டு அம்மாஞ்சிகளா? நாடு எக்கேடு கெட்டால் என்ன? நாடு, மக்கள் என்று அலைந்தால் வீட்டைக் கவனிப்பது யார்? அட்லீஸ்ட் போஸ்டர் அடித்தும், பேனர் வைத்தும் செலவு செய்த காசையாவது திரும்ப எடுக்கவேண்டாமா?’ என்று ரஜினி ரசிகர்களை காட்டமாக துக்ளக்கில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios