டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த மானாமதுரை  அதிமுக  எம்எல்ஏ மாரியப்பன் கென்னடிக்கு மர்ம நபர்கள் சிலர் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் இணைந்த பிறகு டி.டி.வி.தினகரன் தனி அணியாக செயல்படத் தொடங்கினார். இந்த இரு  அணிகளுக்கிடையே தற்போது கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக கடிதம் அளித்துள்ளனர்.

பெரும் பரபரப்பான இந்த சூழ்நிலையில் வரும் 12 ஆம் தேதி அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இபிஎஸ் அணி சார்பில் கூட்டப்படும் இந்த கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரனை பதவியில் இருந்து நீக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கான முயற்சிகளில், டி.டி.வி.தினகரன் தரப்பு தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்நிலையில் தினகரன் ஆதரவு மானாமதுரை தொகுதி எம்எல்ஏ மாரியப்பன் கென்னடிக்கு  மர்ம நபர்கள் சிலர் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர்.

தேனியில் இருந்து அனுப்பப்பட்டுள்ள அந்த கடிதத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிக்கவில்லை என்றால் குடும்பத்துட்ன் கொலை  செய்து விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

எம்எல்ஏவின் ஜாதி பெயரைக் குறிப்பிட்டு, நாய்கள் நாங்கள் போடும் எலும்புத் துண்டை சாப்பிட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கொடுத்தால் 10 கோடி ரூபாய் கொடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மாரியப்பன் கென்னடி கர்நாடகாவில் இருப்பதால் அவரது உதவியாளர், இது குறித்து மானாமதுரை போலீசில் புகார் அளித்துள்ளார்.