தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது எனவும், பழிபோடும் அரசியலை நிறுத்திவிட்டு ஆயுத கலாச்சாரம் அடியோடு  ஒழிக்கப்பட வழிதேடுங்கள் என தமிழக  அரசுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் அறிவுறுத்தி உள்ளார். சென்னையில் யானைக்கவுனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தை மேற்கோள்காட்டி கமல்ஹாசன் இவ்வாறு கூறியுள்ளார்.

சென்னையில் குடும்ப பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் ஆகிய மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். யார் கொலை செய்தது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். யானைக்கவுனி விநாயகர் மேஸ்திரி தெருவை சேர்ந்த தலில் சந்து (74) இவரது மனைவி புஷ்பா பாய் (70) இவர்களுக்கு ஷீத்தல் (38) என்ற மகனும் பிங்கி (35) என்கிற மகளும் இருந்தனர். தலில் சொந்தமாக பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை மூவரும் வீட்டில் இருந்தனர் மகள் பிங்கி மட்டும் வெளியில் சென்றிருந்தார்.  இதையடுத்த இரவு 8 மணி அளவில் பிங்கி வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் படுக்கை அறையில் தாய் தந்தை தனது சகோதரர் ஆகிய 3 பேரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் மூவரும் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. அதாவது அக்கம் பக்கத்தினருக்கு சத்தம் கேட்காமல் எப்படி துப்பாக்கி சூடு நடந்தது என்பது குறித்து விசாரித்ததில் திட்டமிட்டு கொலையாளிகள் சைலன்சர் துப்பாக்கியை பயன்படுத்தி இருக்கலாம் என்றும் அல்லது சத்தமாக தொலைக்காட்சி வைத்தோ அல்லது கதவை பூட்டி விட்டோ கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அறிமுகமான நபர்களாலேயே இந்த கொலை நடந்திருக்கக் கூடும் என சந்தேகிக்கப்பட்டது. தீவிர விசாரணையில்,  கணவனைவிட்டு  பிரிந்து மகாராஷ்டிராவில் உள்ள மருமகளே தனது சகோதரர்களுடன் யானை கவுனிக்கு வந்து, கணவர் மற்றும் மாமியார், மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தப்பிச் சென்றது தெரிய வந்துள்ளது. 

தற்போது அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் மகாராஷ்டிரா விரைந்துள்ளனர். சென்னையில் ஒரே நாளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னை மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன், தலைநகர் சென்னையில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என விமர்சித்துள்ளார். மேலும் கூறுகையில், உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் அறிக்கை போரில் காட்டும் ஆர்வத்தை மக்களை காப்பதிலும் காட்ட வேண்டும் எனவும், பழிபோடும் அரசியலை நிறுத்திவிட்டு ஆயுத கலாச்சாரத்தை அடியோடு ஒழிக்க வழிதேடுங்கள் என அவர் வலியுறுத்தியுள்ளார்.