டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏ கதிர்காமுவுக்கு கொலை மிரட்டல் !!

தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதி எம்எல்ஏ கதிர்காமுவுக்கு பதிவுத் தபாலில் வந்த கடிதத்தில் கொலை மிரட்டல் கடிதம் வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளாக ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். அணிகள் இணைந்து செயல்படத் தொடங்கியதால் அரசுக்கு ஏற்பட்ட சிக்கல் தீர்ந்துவிடும் என  தொண்டர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தனித்து செயல்படத் தொடங்கியதால் புதிய சிக்கல் உருவானது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்றும்வரை ஓயமாட்டோம் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூறி வருவதால் தொடர்ந்து பரபரப்பு நீடிக்கிறது.

இந்நிலையில், டி.டி.வி.தினகரனின் முக்கியமான ஆதரவாளராக கருதப்படும் தேனி மாவட்டம் பெரிய குளம்  தொகுதி எம்.எல்.ஏ. கதிர்காமுவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருந்து தனது பெயருக்கு தபாலில் கடிதம் வந்துள்ளதாகவும்.  அதில், ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ்.-ஐ ஆதரிக்காவிட்டால் குடும்பத்துடன் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்திருப்பதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  கதிர் காமு,தனக்கு எத்தனை மிரட்டல் வந்தாலும்  டிடிவி தினகரனுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என இன்று டி.டி.வி.தினகரன் தலைமையில் எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்திக்க உள்ள நிலையில் இந்த மிரட்டல் கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.