திருச்சி முக்கொம்பில் இருந்து காவிரி உரிமை மீட்புப்யணத்தைத் தொடங்கிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் நடந்து சென்ற தொட்டியம் ஒன்றிய திமுக செயலாளர் சீமானூர் பிரபு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு கொடியை கையில் ஏந்தியபடியே மரணமடைந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினையான  காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில்  தொடர் போராட்டங்கள்  நடத்தப்பட்டு  வருகின்றன.

நேற்று முன்தினம் தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக திருச்சியில் இருந்து கடலூர் வரை காவிரி உரிமை மீட்பு  பயணத்தை நடத்த  தி.மு.க. சார்பில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்று திருச்சி முக்கொம்பிஙல இருந்து காவிரி உரிமை மீட்பு நடைபயணம் தொடங்கியது.  மற்றொரு குழு வரும்  9-ந் தேதி அரியலூரில் இருந்து  பயணத்தை தொடங்குகிறது..

இதன்  தொடக்க நிகழ்ச்சியாக முக்கொம்பில் கொடியேற்றப்பட்டது. பின்னர் மு.க.ஸ்டாலின் மற்றும்  கூட்டணி கட்சி  தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், விவசாயிகள்,  பல்வேறு அமைப்பினர்  அங்கிருந்து நடைபயணமாக புறப்பட்டனர்.  

=இந்த நடைபயணத்தில் மு.க.ஸ்டாலினுடன் தி.மு.க.வை சேர்ந்த 89 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.  அவர்களுடன் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர்.

இந்த நடைபயணம் தொடங்கிய ஒரு  சில மணித்துளிகளில் தான் அந்த  சோகம் நிகழ்ந்தது. நடைபயணத்தில் உற்சாகமாக நடந்து சென்று கொண்டிருந்த திமுக தொட்டியம் ஒன்றிய செயலாளர் சீமானூர் பிரபுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

இதையடுத்து திமுக கொடியை நெஞ்சில் சுமந்தபடி அப்படியே கீழே சாய்ந்தார். அடுத்த சில நொடிகளில் பிரபு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது திடீர் மரணத்தை தாங்க முடியாமல் திமுக தொண்டர்கள் கதறி அழுதனர்.

இந்த சீமானூர் பிரபு திருச்சி மாவட்ட திமுகவில் மிகவும் பிரபலமானவர், முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு மிகவும் நெருக்கமானவர், கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்.

தற்போது தமிழர்களின் வாழ்வாதாரமான காவிரி உரிமையை மீட்டு எடுக்க நடைபயணம் மேற்கொண்டபோது சீமானூர் பிரபு உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.