தமிழகத்தில் வரலாற்றிலேயே 30 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை அமைத்தது அதிமுக தான் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

அதிமுக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது;-அதிமுக.,வையும் ஆட்சியையும் விமர்சிப்பவர்கள், தங்களது குடும்பத்திற்காக உழைத்து கொண்டுள்ளனர். ஆனால், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களும் நாட்டுக்காக உழைத்தனர். இரு தலைவர்களுக்கும் வாரிசு இல்லை, அவர்களுக்கு மக்கள் தான் வாரிசு. எதிரிகளும் உச்சரிக்கும் பெயராக எம்ஜிஆர் பெயர் உள்ளது. 

கட்சியில் இருந்து தனி அணியாக பிரிந்து சென்றவர்கள் எந்த கட்சியிலும் மீண்டும் இணைந்ததில்லை. ஆனால், அதிமுகவில் மட்டுமே பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைந்துள்ளனர். தமிழக வரலாற்றிலேயே 9 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்த ஒரே கட்சி அதிமுக தான். 9 ஆண்டுகள் ஆட்சி செய்து அனைத்து துறைகளிலும் சிறப்பான சாதனை படைத்துள்ளோம். ஜெயலலிதா மறைந்த பிறகும் சிறப்பான ஆட்சியை கொடுத்து வருகிறோம். 

தமிழ் மண்ணை 30 ஆண்டுகள் ஆண்ட கட்சி அ.தி.மு.க. மட்டுமே. சாதாரண தொண்டனுக்கும் கதவை தட்டி பதவி வழங்கும் ஒரே கட்சி அ.தி.மு.க. மட்டும் தான். உயர்கல்வி படிப்போர் விகிதத்தில் நாட்டிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. அடுத்த ஆண்டு 1,650 மருத்துவ இடங்கள் கூடுதலாக கிடைக்க உள்ளன. சென்னையில் மழைநீர் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் 3,000 இடங்களில் மழைநீர் தேங்கிய நிலை மாறி தற்போது 19 இடங்களில் மட்டுமே நீர் தேங்கியது. குடிமராமத்து பணிகள் செய்துள்ளதால் தமிழகத்தில் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன என தெரிவித்துள்ளார்.