பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொங்கல் பரிசு அளிப்பது தவறா? என  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். ஏழை மக்களுக்கு கொடுப்பதை தடுத்தவர்கள் வென்றதாக சரித்திரம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு, அட்டைதாரர்களுக்கு தலா 2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதாவது தேர்தல் நெருங்கும் நேரத்தில் தமிழக முதலமைச்சர் 2500 ரூபாய் என அறிவித்திருப்பது வாக்குகளுக்கான லஞ்சம் என விமர்சித்துள்ளதுடன், தேர்தலுக்கான பணப்பட்டுவாடா எனவும் தாக்கியுள்ளனர். 

இந்நிலையில் நேற்று சேலம் மாவட்டம் எட்டிகுட்டை மேட்டில் எடப்பாடி பழனிச்சாமி மக்கள் மத்தியில் பேசியதாவது:-  அதிமுக அரசை பொறுத்தவரை மக்கள் சுபிட்சமாக வாழவேண்டும். மக்களுக்கு குறிப்பறிந்து சேவை செய்யும் அரசு அதிமுக அரசு. காலத்திற்கு ஏற்றவாறு மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும், அதுதான் அரசின் கடமை. அதை எங்களது அரசு செவ்வனே செய்து வருகிறது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஊடகத்திடமும், டுவிட்டரிலும், பொங்கல்பரிசு அறிவித்தது சுயநலம் என்று பதிவு செய்திருக்கிறார். இது என்ன சுயநலமா? போன வருடம் 1000 ரூபாய் கொடுத்தோம் அன்று நன்றாக இருந்தோம்.  இப்போது கொரோனாவாலும், புயல் கனமழையாலும் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி அளிப்பது தவறா? 

ஏழை மக்களுக்கு கொடுப்பதை யார் தடுக்கிறார்களோ அவர்கள் என்றைக்கும் வென்றதாக சரித்திரம் இல்லை. நாங்கள் ஏழை மக்களை பார்க்கின்றோம், ஏழை மக்களின் எண்ணம் நிறைவேற வேண்டும் அதற்காக இந்த திட்டத்தை அறிவித்து இருக்கின்றோம். நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன், கிராமத்திலிருந்து நகரம் வரை ஏழை மக்களோடு பழகி இருக்கிறேன். ஆகவே ஒரு பண்டிகை வரும் போது அவர்கள் எப்படி கஷ்டப்படுவார்கள் என்று நன்றாகவே தெரியும். அதுவும் கொரோனா காலத்தில் பட்ட துன்பம் அதிகம். புயல் கனமழையால் ஏற்பட்ட துன்பம் அதைவிட கடினம். தைத்திருநாள்தான் தமிழர்களுடைய பொன்னான நாள், தைப்பொங்கல் எல்லா தமிழ் இல்லத்திலும் கொண்டாடப்படும், அப்படி சிறப்பாக கொண்டாடுவதற்காக அறிவிக்கப்பட்ட திட்டத்தை சுயநலத்தோடு அறிவித்ததாக சொல்கின்றார்களே இது நியாயம்தானா என்பதை பொதுமக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.