இனி பத்திரப்பதிவுக்கு வேறு மண்டலங்களுக்கு செல்லும்போது இ-பாஸ் தேவையில்லை என அரசு உத்தரவிட்டுள்ளது.

மண்டலம் விட்டு வேறு மண்டலம் செல்பவர்கள் இ-பாஸ் பெறுவது கட்டாயமாக உள்ள நிலையில், அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் போக்குவரத்து வசதிக்காக அனைத்து மாவட்டங்களும் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு செல்வதற்கு மட்டும் அரசின் இ-பாஸ் பெறுவது அவசியமாக உள்ளது.

மண்டலங்களுக்கு இடையே பொதுப் போக்குவரத்து இயங்காத நிலையில், சொந்த வாகனங்களில் செல்வோர் இ-பாஸ் பெறுவது கட்டாயமாக உள்ளது. இந்நிலையில், பத்திரப் பதிவு பணிகள் நடைபெற அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் பத்திரப்பதிவுக்கு வெளியூர் செல்வோர் பாஸ் வாங்குவது அவசியமா? என்ற கேள்வி எழுந்தது. தற்போது அதனை  அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

பத்திரப்பதிவுக்காக வழங்கப்படும் டோக்கனையே மண்டலம் விட்டு வேறு மண்டலம் செல்வதற்கான இ- பாஸாக பயன்படுத்திக் கொள்வதற்காக அனுமதி வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா கடிதம் மூலம் அறிவுறுத்தி உள்ளார்.

அதில், பத்திரப்பதிவுத்துறை அளித்த டோக்கனையும், பதிவு செய்யப்போகும் ஆவணத்தையும் ஆதாரமாக எடுத்துகொண்டு அனுமதிக்க வேண்டும் என்றும், மண்டலத்தை விட்டு வெளியேறும்போது பத்திரம் பதிவு செய்ததற்கான ஆவணத்தை ஆதாரமாக காட்ட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது