வருமானத்தை எதிர்பார்க்கும் தங்க தமிழ்ச்செல்வன் தன்மானத்தை பற்றி பேசக்கூடாது எனவும் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் யாரும் அறிவாலய வாசலில் நிற்க மாட்டார்கள் எனவும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”ஜூலை 6-ம் தேதியிலிருந்து, முதல் தீவிர உறுப்பினர் சேர்க்கை பாஜகவில் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும். இந்த கால கட்டத்தில் மிஸ்டுகால் மூலம் உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். உள்ளாட்சி, சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிபெற அடிப்படையை பலப்படுத்தி வருகிறோம். வருங்காலத்தில் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்திருந்தால் அதிக திட்டங்கள் கிடைத்திருக்கும் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

மனித கழிவுகளை மனிதனே அகற்றும் தொழில் செய்பவர்கள் அதை விடுத்து மாற்றுத் தொழில் செய்ய முன்வந்தால் 40,000 ரூபாய் மத்திய அரசு வழங்குகிறது. இந்திய வீரர்களின் உடை காவி கலருக்கு மாற்றத்திற்கு பாஜக காரணம் அல்ல. காவி என்பது ஒரு நிறம்.
காவி எங்கு வந்தாலும் அதனை பாஜகவுடன் இணைத்துக் கூறுகிறார்கள். மதுரையில் பாலத்திற்கு காவி கலர் அடித்தால் கூட அது பாஜக பாலம் என்கின்றனர்.

யாகம் நடத்தியதால் மழை வந்ததா? அல்லது திமுக நடத்திய போராட்டத்தால் மழை வந்ததா என கேட்டால் யாகம் நடத்தியதற்காக தான் வாய்ப்பிருக்கிறது. வருமானத்தை எதிர்பார்க்கும் தங்கதமிழ்செல்வன் தன்மானத்தை பற்றி பேசக்கூடாது. ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் யாரும் அறிவாலய வாசலில் நிற்க மாட்டார்கள்’’ என அவர் தெரிவித்தார்.