தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் சென்னையிலிருது தூத்துக்குடி செல்லும் விமானத்தில் இன்று பயணம் செய்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில்  அவரை பார்த்ததும் சோபியா என்ற பெண் பாஜக ஒழிக என கோஷமிட்டுள்ளார். இதனை அடுத்து,  தமிழிசை சவுந்தர ராஜனுக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

பின்னர், அங்கிருந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தினர். கோஷமிட்ட இளம்பெண்ணுக்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளிடம் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார். 

விசாரணையில், கோஷமிட்டதாக சொல்லப்படும் அந்த இளம் பெண், தூத்துக்குடியைச் சேர்ந்த மருத்துவரின் மகள் சோபியா  என்பதும், தற்போது அவர் கனடாவில் படித்து வருவதும் தெரியவந்தது. இதனை அடுத்து, சோபியாவை கைது செய்த போலீசார், அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தினர்.

சோபியாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, நெல்லை கொக்கிரகுளம் மகளிர் சிறையில் அடைக்க கொண்டு செல்லப்பட உள்ளார். இதனிடையே  சோபியாவின் தந்தை டாக்டர் சாமி, தமிழிசை  மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.