அயர்லாந்தில் செவிலியர் பணிக்குச் சென்று தூத்துக்குடிக்குத் திரும்ப முடியாமல் தவித்த 8 மாத கர்ப்பிணிப் பெண், சொந்த ஊருக்குத் திரும்ப உதவிய எம்.பி.கனிமொழியை நேரில் சந்தித்து கண்ணீர் மல்க நன்றி கூறியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையை சேர்ந்த டீனு என்ற பெண் அயர்லாந்தில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். தற்போது எட்டு மாத கர்ப்பிணியான அவர் கொரோனா பேரிடரின் காரணமாக தாயகம் திரும்ப இயலாமல் தவித்து வந்திருக்கிறார். இந்நிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி அவர்களிடம் உதவி கேட்டுப் பார்க்கலாம் என முடிவு செய்து அவரது ஈமெயில் முகவரிக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியிருக்கிறார். 

அதைப்பார்த்த கனிமொழி எம்.பி. அவர்கள் உடனடியாக தூதரகம் மூலம் அப்பெண்ணை இந்தியாவுக்கு வரவழைக்க முயற்சி எடுத்துள்ளார். அவரது அக்கறை நிறைந்த முயற்சியால் தற்போது தாயகம் திரும்பிய கையோடு நேராக அந்த கர்ப்பிணி பெண் டீனு தனது கணவருடன் தூத்துக்குடியில் உள்ள கனிமொழி எம்.பி. அவர்களின் இல்லத்திற்கு வந்து அவரைச் சந்தித்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். கனிமொழி எம்.பி., அவர்கள் அப்போது 'உங்களுக்கு குழந்தை பிறந்ததும் நிச்சயம் வந்து சந்திக்கிறேன்' என்று அக்கறையோடு நலம் விசாரித்து அனுப்பி வைத்தார்.