Thoothukudi gunfire - The struggle field is Tamil Nadu
தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் அரசியல் கட்சிகள், மாணவ அமைப்புகள் என பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று நடைபெற்ற போராட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்து வருகிறது.
சென்னையில் கிண்டி - சின்னமலை, நந்தனம், அயோத்திகுப்பம், வள்ளுவர்கோட்டம், சென்னை டிஜிபி அலுவலகம் முற்றுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடந்து வருகின்றன. இந்த மறியல் போராட்டத்தில் மாணவ அமைப்புகள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை நந்தனத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மாணவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை எஸ்.பி.யும் கொலை வழக்கில் கைது செய்யப்பட வேண்டும் என்றும், இது ஒரு திட்டமிட்ட போலி என்கவுண்டர் செய்துள்ளதாகவும் போராட்டத்தின்போது அவர்கள் கோஷமிட்டனர். இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு சுமார் ஒரு மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டது., வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
