சாத்தான்குளம் வியாபாரிகள் காவல் நிலையத்தில் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டு கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் ரஜினியை விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்த எதிர்ப்பு தெரிவித்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமிழ்  தேசிய இயக்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஒருவருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த சமயத்தில் அந்த நபர், திடீரென போலீஸ்காரரின் சட்டையை பிடித்துவிட்டார். இதனால் அங்கு மோதல் ஏற்பட்ட நிலையில் தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் தலையிட்டு பிரச்சனையை தீர்த்தனர். ஆனால் இந்த விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

இந்த சமயத்தில் நடிகர் ரஜினி, போலீஸ்காரர்கள் நமக்காக பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள், அவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்? அவர்களை சட்டையை பிடிப்பது நியாயமா என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திலும் கூட ரஜினி போலீசாருக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்து இருந்தார். இதனால் ரஜினி போலீசாரை ஒரு போதும் விமர்சிக்கமாட்டார் என்கிற பேச்சுகள் எழுந்தன. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரிகளான தந்தை – மகன் கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்தனர்.

சாத்தான் குளம் காவல் நிலையத்தில் வைத்து தந்தை மகனை அங்கிருந்த எஸ்ஐ பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கொடுங்காயத்தால் தான் இருவரும் சிறையில் உரிய சிகிச்சை இல்லாமல் உயிரிழந்துவிட்டதாக கூறி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விஷயத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளையும் கூட தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. ஆனால் கடந்த காலங்களில் போலீசாரை உயர்வாக பேசி வரும் ரஜினி இந்த விஷயத்தில் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வருகிறார். இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆளுர் ஷாநவாஸ் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அதில் போலீஸ்காரர் ஒருவரின் சட்டையை பிடித்ததற்கே ரஜினி கொந்தளித்தார். ஆனால் இங்கு இரண்டு பேரை போலீஸ்காரர்கள் அடித்தே கொலை செய்துள்ளனர். இந்த விஷயத்தில் ரஜினி மவுனமாக இருப்பது ஏன்? பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக ரஜினி பேசமாட்டாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.