Asianet News TamilAsianet News Tamil

இப்படி செய்தால் நிச்சயம் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் - பக்காவா ஐடியா தரும் ஜி.கே.வாசன்...

This will happen definitely Cauvery Management Board will set - GK Vasan
This will happen definitely Cauvery Management Board will set - GK Vasan
Author
First Published Mar 31, 2018, 11:04 AM IST


கோயம்புத்தூர்

தமிழக ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் என்று அனைத்து கட்சிகளையும் தமிழக அரசு டெல்லிக்கு அழைத்துச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினால்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று தமிழ் மாநில காங்கிரசு தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

தமிழ் மாநில காங்கிரசு தலைவர் ஜி.கே.வாசன் நேற்று இரயில் மூலம் கோயம்புத்தூர் வந்தார். இதனையடுத்து காங்கிரசு மற்றும் பா.ஜனதா ஆகிய கட்சிகளில் இருந்து விலகியவர்கள் ஜி.கே.வாசன் முன்னிலையில் த.மா.கா.வில் இணையும் நிகழ்ச்சி கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் முன்பு உள்ள அலுவலகத்தில் நடந்தது. 

புதிதாக கட்சியில் சேர்ந்த சி.ஆர்.ரவிச்சந்திரன், குல்பி தங்கராஜ், செல்வபுரம் நசீர் உசேன் மற்றும் பலரை ஜி.கே.வாசன் சால்வை அணிவித்து வரவேற்றார். 

பின்னர், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம், "காவிரிநீர் பிரச்சனை என்பது நமது பயிர் பிரச்சனை மட்டுமல்ல. உயிர் பிரச்சனையும் கூட. 

காவிரி பிரச்சனையை பொறுத்தவரை மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நம்பிக்கையோடு காத்திருந்த தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மத்திய அரசு நம்பிக்கை துரோகம் செய்துள்ளது. 

கர்நாடக தேர்தல் காரணமாக மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்க காலம் தாழ்த்த நினைக்கிறது. 

வாரியத்தை அமைக்காமல் மத்திய பா.ஜனதா அரசும், இதை அமைக்க தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுவரும் கர்நாடக காங்கிரசு அரசும், தமிழக மக்களையும், விவசாயிகளையும் வஞ்சித்துவிட்டன. எனவே ,இரண்டு தேசிய கட்சிகள் மீதும் தமிழக மக்கள், விவசாயிகள் நம்பிக்கை இழந்துவிட்டனர். 

காவிரி பிரச்சனையை அரசியலுக்கு அப்பாற்பட்டு பார்க்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒத்த கருத்தோடு செயல்பட்டால்தான் தீர்வு காண முடியும். தேசிய கட்சிகள் இதை தமிழக பிரச்சனை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது தேசிய பிரச்சனை.

காவிரி பிரச்சனை தொடர்பாக திருச்சியில் நாளை (இன்று) காலை 11 மணிக்கு தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் டெல்டா மாவட்ட தலைவர்களின் அவசர கூட்டம் என் தலைமையில் நடக்கிறது. 

அந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மேலும் அழுத்தம் கொடுக்கும் வகை யில் விவசாயிகளின் நியாயத்தை எடுத்துக் கூறும் வகையில் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் அறிவிக்க உள்ளோம். 

1-ந் தேதி (நாளை) விவசாயிகளை சந்தித்து பேச உள்ளேன். 2-ந் தேதி சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் மாநில காங்கிரசு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

காவிரி பிரச்சனையில் பா.ஜனதா மற்றும் காங்கிரசு ஆகிய தேசிய கட்சிகளின் நிலை என்ன என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. அதை விவசாயிகளும், மக்களும் தெளிவாக புரிந்து கொண்டு அந்த கட்சிகளையும் அவற்றை சார்ந்துள்ள கட்சிகளையும் வருகிற தேர்தலில் மக்கள் எடை போடுவார்கள். 

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கடைசி நாள் தான் போட வேண்டும். ஆனால், அதையெல்லாம் தாண்டி தமிழக அரசின் செயல்பாடு மெத்தனமாக உள்ளது.

எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய தயார் என்று கூறியிருப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழக ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் என்று அனைத்து கட்சிகளையும் தமிழக அரசு டெல்லிக்கு அழைத்துச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினால்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சனையில் தீர்வு ஏற்படும்.

தி.மு.க. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி பொறுப்பில் இருந்தபோதும் நானும் மத்திய மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தேன். அப்போது காவிரி பிரச்சனையில் ஒத்த கருத்து ஏற்படவில்லை. அதை விவசாயிகள் பிரச்சனையாக பார்க்காமல் அரசியல் சாயத்துடன் பார்க்கப்பட்டது. அதனால் அப்போது தீர்வு ஏற்படவில்லை. 

ஆனால், தற்போது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் கூட்டாட்சி தத்துவத்தை மதிக்காமல் கர்நாடக அரசும், மத்திய அரசும் செயல்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது" என்று அவர் கூறினார். 

Follow Us:
Download App:
  • android
  • ios