இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “நியூசிலாந்து நாட்டில் 2025-ம் ஆண்டுக்குள் புகைப்பிடிக்கும் வழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்குடன், 2004-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் புகைப்பிடிக்கக் கூடாது என்று தடை விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்திருக்கிறது. மக்களின் நலன் காக்கும் நோக்கத்துடன் நியூசிலாந்து நாட்டு அரசு எடுத்துள்ள இந்த முடிவு வரவேற்கத்தக்கது; இது உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும். உலகில் வாழ்வதற்கு ஏற்ற நாடுகள் பட்டியலில் முன்னணியில் உள்ள நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று. கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட அனைத்திலும் அந்த நாடு முன்னணியில் உள்ளது. ஆனாலும் புகைப்பிடிக்கும் வழக்கம் அந்த நாட்டில் கட்டுப்படுத்த முடியாத தீமையாக இருந்து வருகிறது.
புகைப்பழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனாலும் கூட, இன்றைய நிலையிலும் நியூசிலாந்தின் மொத்த மக்கள்தொகையான 49 லட்சம் பேரில் குறைந்தது 5 லட்சம் பேர் தினமும் புகைப் பிடிக்கிறார்கள். இந்த எண்ணிக்கையையும் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நோக்குடன்தான் புதிய திட்டங்களை நியூசிலாந்து வகுத்திருக்கிறது. முதல் நடவடிக்கையாக 2004-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் புகைப்பிடிக்கவும், அவர்களுக்கு சிகரெட்டுகளை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படவுள்ளது. அதன்படி பார்த்தால், 18 வயதுக்கும் குறைவான எவரும் இனி புகைப்பிடிக்க முடியாது.
அதுமட்டுமின்றி, புகைப்பிடிப்பதற்கான வயது வரம்பை அடுத்தடுத்து உயர்த்துதல், சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களில் அனுமதிக்கப்படும் நிகோட்டின் அளவை குறைத்தல், புகையிலைப் பொருட்களுக்கான குறைந்தபட்ச விலையை உயர்த்துதல், புகையிலை மற்றும் சிகரெட் விற்கப்படும் இடங்களின் எண்ணிக்கையை குறைத்தல் ஆகிய கட்டுப்பாடுகளையும் விதிக்க நியூசிலாந்து அரசு தீர்மானித்துள்ளது. இந்த நடவடிக்கைகளின் பயனாக 2025-ம் ஆண்டுக்குள் சிகரெட் பயன்பாட்டை முழுமையாக கட்டுப்படுத்தி விட முடியும் என்று அந்நாட்டு அரசு நம்புகிறது. நியூசிலாந்தில் இந்தக் கட்டுப்பாடுகளை அந்த நாட்டு அரசு விதிப்பதற்கு என்னென்ன காரணங்கள் உள்ளனவோ, அதை விட அதிக காரணங்கள் இந்தியாவில் சிகரெட் பயன்பாட்டை தடை செய்வதற்கு உள்ளன.
நியூசிலாந்தில் 5 லட்சம் பேர் மட்டும் தான் புகைப்பிடிக்கிறார்கள்; அவர்களில் ஆண்டுக்கு 4,500 பேர் உயிரிழக்கின்றனர். இது அபாயகரமான அளவு அல்ல. ஆனாலும், புகையிலைப் பயன்பாட்டை தடை செய்ய வேண்டும் என்று நியூசிலாந்து துடிக்கிறது. ஆனால், இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 12 கோடி. புகைப்பிடிப்பதால் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழப்போரின் எண்ணிக்கை மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகம். இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை நியூசிலாந்தை விட 240 மடங்கு அதிகம்; உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 222 மடங்கு அதிகம். இந்தியாவை விட 240 மடங்கு குறைவாக புகைப் பிடிக்கும் வழக்கம் உள்ள நியுசிலாந்து நாடே புகைப்பழக்கத்திற்கு தடை விதிக்கவுள்ள நிலையில், இந்தியாவில் இத்தகைய தடைகளை விதிப்பது தவிர்க்க முடியாதது ஆகும்.
வெள்ளையர்களுக்கு மதுவும், புகையும் தவிர்க்க முடியாத தேவைகள் ஆகும். ஆனால், அவர்களே அவற்றின் தீமையை உணர்ந்து புகைப்பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று தீர்மானித்து, அதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். இந்த நடவடிக்கை, புகைப்பழக்கத்தால் பெரும் இழப்புகளை சந்தித்துள்ள நமது கண்களை திறப்பதாக அமைய வேண்டும். பாமகவைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது, புகையிலை இல்லா உலகம் காண விரும்பினார். அதற்காக இந்தியாவில் பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடை, திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளின் போது எச்சரிக்கை வாசகம், புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது எச்சரிக்கைப் படங்கள் உள்ளிட்ட ஏராளமான நடவடிக்கைகளை எடுத்தார்.
நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் ஆயிஷா வெர்ரல் ஆகிய இரு பெண்களும் கூட்டணி அமைத்துக் கொண்டு புகைக்கு எதிராக போராடுகின்றனர். இந்த முயற்சிக்கு நியுசிலாந்தில் வணிகர்கள் தரப்பில் கடுமையான எதிர்ப்பு நிலவுகிறது. ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் புகையை ஒழிப்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். அதே துணிச்சலுடன் இந்தியாவிலும் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க அரசு முன்வர வேண்டும். இந்தியாவில் புகைப் பிடிப்பதற்கான வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்துவதற்கான சட்டம் தயாரிக்கப்பட்டு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. அதை நிறைவேற்றுவது மட்டும் போதுமானதல்ல. ஒரு குறிப்பிட்ட இலக்கு வைத்து அதற்குள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முன்பாக புகைப் பழக்கத்தை படிப்படியாக குறைப்பதற்கான நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் அடுத்தடுத்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.