கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் சுமார் 62 சதவீத குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்திள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது, இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 79 ஆயிரத்து 466 ஆக உயர்ந்துள்ளது,  இதுவரை 23 ஆயிரத்து 187 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 5 லட்சத்து 54 ஆயிரத்து 429 பேர் பூரண குணமடைந்துள்ளனர். எதிர்வரும் நாட்களில் இந்த வைரஸின் தாக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. நாடு முழுவதும் தொடர் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். தொடர் ஊரடங்கு காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் குழந்தைகள் உரிமைகளுக்காக செயல்படுகிற save the children என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு நாடு முழுவதும் சர்வே நடத்தியுள்ளது. 

அதில் இந்தியா முழுவதும் 7,535 குடும்பங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் வட இந்தியாவில்  3 ஆயிரத்து 827 குடும்பங்களிலும், தென்னிந்தியாவில் 556 குடும்பங்களிலும், கிழக்கு பிராந்தியத்தில் 1,772 குடும்பங்களிடம், மேற்குப் பிராந்தியத்தில் 1,130 குடும்பங்களிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவில் கொரோனா வைரஸ் தொற்று பரவ காரணமாக 62% வீடுகளில் உள்ள குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர். இது சர்வேயில் பங்கேற்ற மொத்த குடும்பங்களில் ஐந்தில் மூன்று பங்கு ஆகும், ஐந்தில் ஒரு பங்கு குடும்பத்தினரின் குழந்தைகள் பள்ளிகளில் மதிய உணவு பெறவில்லை. மேற்குப் பிராந்தியத்தில் 52 சதவீதத்தினரும், வடக்கு பிராந்தியத்தில் 39 சதவீதத்தினரும், தெற்கில் 38 சதவீதத்தினரும், கிழக்கில் 28 சதவீதத்தினரும் மதிய உணவு பெறவில்லை.  நகர்ப்புறம் கிராமப்புறம் என ஆராய்ந்ததில், நகர்ப்புறங்களில் 40 சதவீதத்தினரும், கிராமப்புறங்களில் 38 சதவீதத்தினரும் மதிய உணவு பெறவில்லை. சர்வேயில் கலந்து கொண்டவர்களில் 40 சதவீதத்தினரால் குடும்பத்தினருக்கு போதுமான உணவு வழங்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

10 பேரில் 8 பேர் தங்களது குடும்பங்கள் வருமானத்தை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர், 14 சதவீத குடும்பங்களில் ஸ்மார்ட்போன் இல்லை அல்லது ஆன்லைன் கல்விக்கு உதவும் வகையில் இணையதள வசதி இல்லை, 10 குழந்தைகளில் 4 குழந்தைகள் வீடுகளில் படித்துக்கொண்டே விளையாடுவதும், பள்ளிகள் மூடல்காரணமாக நான்கில் ஒரு குழந்தை வேலை பார்ப்பதாகவும் தெரியவந்துள்ளது. ஐந்தில் ஒரு பங்கு குடும்பத்தினர் குழந்தைகளின் கல்விக்காக எவ்விதமான கல்வி உதவியையும் பள்ளிக்கூடத்திலும் கல்வித்துறையிலும் பெறவில்லை என தெரிவித்துள்ளனர். கிராமப்புறங்களில் 42 சதவீத குடும்பங்களிலும், நகர்ப்புறங்களில் 40 சதவீத வீடுகளில் எந்த கல்வி உதவியும் பெறவில்லை என தெரிவித்துள்ளனர். அதேபோல் சர்வேயில் பங்கேற்ற குடும்பங்களில் நான்கில் மூன்று பங்கு குடும்பங்களில் வாழ்வாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 80 சதவீதத்தினர் பண நெருக்கடியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், 45 சதவீத குடும்பங்களில் கடன் அடமானம் போன்றவற்றின் மூலம் பணம் பெற தொடங்கியுள்ளனர். பத்தில் ஒரு குடும்பத்தினர் வீட்டுப் பொருட்களை, சொத்துக்களை விற்க தொடங்கியிருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.