* தமிழகம் மீது மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படும் பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைக்க யோசிக்க வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ‘மோடியா? லேடியா!’ என்று கேட்டு தமிழகத்தில் தனித்து நின்று பெரும் வெற்றியை பெற்றார் ஜெயலலிதா. அப்படியொரு முடிவை இப்போதும் அ.தி.மு.க. எடுக்கவில்லையென்றால் அக்கட்சிக்கு துணையாய் நிற்பதில் எங்களுக்கு சங்கடம் ஏற்படும்: உ.தனியரசு எம்.எல்.ஏ. 
(ஏனுங்ணா காங்கயம் காளை சைஸா வேற தொழுவம் பக்கமா சாயுற மாதிரி தெரியுதே? அப்ப கூடிய சீக்கிரம் உங்களை தளபதி மேடையில  பார்க்கலாம் போல.)

* ஒரு முறை அ.தி.மு.க.வையும், மறுமுறை தி.மு.க.வையும் ‘சிறப்பா செயல்படுவாங்க!’ன்னு நம்பி மாத்தி மாத்தி கொண்டாட கூடாதுல்ல. கொள்கையில உறுதியா நிக்கணும் தம்பி. அதனாலதான் தனிச்சு நிக்குறோம்: சீமான். (கொள்கையில உறுதியா நிண்ட நீங்க ஏம்ணே....’வீரமங்கை வேலு நாச்சியாராக ஜெயலலிதாவை பார்க்கிறேன்!’ அப்படின்னு எக்கச்சக்கமா புகழ்ந்து கொட்டுனீங்க. அதே வாயிதானே இப்ப வசவு பாடுது?! இதுக்கு பேருதான் கொள்கையில உறுதியா நிக்குறதாண்ணே?)

* எங்கப்பா நூறு ஜெயலலிதாவுக்கு சமம், நூறு கலைஞருக்கு சமம், நூறு ஸ்டாலினுக்குச் சமம். அப்ப போல் இப்பவும் நாங்க நிக்குற கூட்டணிதான் வெல்லும்: விஜயகாந்தின் மகன் பிரபாகரன். 
(அப்ப ஏனுங்க தம்பி 2014 நாடாளுமன்ற தேர்தல்லேயும், 2016 சட்டமன்ற தேர்தல்லேயும் நீங்க இருந்த கட்சி மரண மாஸ் அடி வாங்குச்சு. அதெல்லாம் சரி, உள்ளூர்ல வீடு இருந்தும் பாவம் ஏர்போர்ட்ல பத்து மணி நேரம் தூங்குறவரை போயி நூறு பேருக்கு, ஆயிரம் பேருக்கு சமம்னு சொல்றதெல்லாம் நல்லாவா இருக்குது?)

 

*  நாம என்னதான் கணக்கு போட்டு கூட்டணி அமைச்சாலும், மக்கள்தான் ஓட்டுப் போடும் எஜமானர்கள். அவர்களை மாநிலம் முழுவதும் சென்று சந்தித்து, அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ற கட்சிகளுடனே கூட்டணி அமைக்கும் முடிவில் இருக்கிறேன்: ஜி.கே.வாசன். 
(இதுவல்லவோ அரசியல். மக்கள் சொன்ன கட்சியோடுதான் கூட்டணி வைக்கப்போறீங்கன்னா நாற்பது தொகுதியிலேயும் உங்க கூட்டணி நிச்சயமா ஜெயிக்க போகுது இல்லையா தலைவரே! சரி இத்தனை வேட்பாளர்களுக்கு எங்கே போவீங்க?)

* சூழலுக்கு ஏற்ப கூட்டணி வைப்பதில் தவறில்லை. ஆனால் கட்சியின் கொள்கைகளிலும், லட்சியங்களிலும்தான் மாற்றம் கூடாது. அம்மாவே 234 தொகுதிகளிலும் தனித்தும் நின்றிருக்கிறார், கூட்டணியும் வைத்திருக்கிறார்.: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். 
(கொள்கை, லட்சியம்னா என்னண்ணே? சசிகலா முதல்வர் ஆகணும்னு சொல்லி மொட்டை போட்டீங்க. அப்புறம் அந்தம்மா ஜெயிலுக்கு போனதும் எடப்பாடி - ஓ.பி.எஸ்.ஸை ‘மருது சகோதரர்கள்’ அப்படின்னு புகழுறீங்க. இதுக்கு பேர்தான் லஸ்ஸியமாண்ணே?)