பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்களின் பயிற்சி கால ஊதியத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும் எனவும், கல்விக் கட்டணத்தை ரத்து செய்திட வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கையின் விவரம்:- 

தமிழகத்தில் பயிற்சி மருத்துவர்களுக்கும், பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கும், குறைவான பயிற்சி கால ஊதியமே வழங்கப்படுகிறது. பயிற்சி மருத்துவர்களுக்கு ரூ21,000 மும், பட்ட மேற்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ 37000 மும் , இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு 39500மும் , மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ 42000மும் தற்பொழுது வழங்கப்படுகிறது. இது மத்திய அரசு மருத்துவ கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் பயிற்சி கால ஊதியத் தொகையில் பாதியாகும். பல மாநிலங்களை ஒப்பிடும் பொழுதும் தமிழகத்தில்  பயிற்சி கால ஊதியம் குறைவாகவே வழங்கப்படுகிறது. 

கொரோனா காலத்தில் அவர்களின் பணியைப் பாராட்டி மஹாராஷ்டிர மாநிலம், பயிற்சி மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்களின் பயிற்சி கால ஊதியத்தை  உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. டெல்லி மௌலான ஆசாத் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு ரூ 1,00,652 ம், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ 1,03,447 ம், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு 1,06,242 ம் பயிற்சிகால ஊதியமாக வழங்கப்படுகிறது. ஆண்டு கல்விக் கட்டணமும் ரூ 15,600 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு நிறுவனங்களில் 72,000 முதல் 1,06,000 வரை பயிற்சி கால ஊதியம் வழங்கப்படுகிறது.எனவே, தமிழக அரசும் பயற்சி மருத்துவர்களுக்கும், பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கும்  பயிற்சி கால ஊதியத்தை மத்திய அரசுக்கு இணையாக உயர்த்த வேண்டும் என  சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது. 

கொரானா தடுப்பு நடவடிக்கை மற்றும் சிகிச்சை வழங்களில் பட்ட மேற்படிப்பு மாணவர்களின் பங்கு மகத்தானது. தங்களது முக்கியமான கல்விகற்கும் காலக்கட்டத்தில் , இது வரை 6 மாதத்தை அவர்கள் கொரானாவுக்காக தியாகம் செய்துள்ளனர். அதைப் பாராட்டி கேரள மாநிலம் இவ்வாண்டிற்கான கல்வி கட்டணத்தை ரத்து செய்துள்ளது. எனவே, தமிழக அரசும், பட்ட மேற்படிப்பு மாணவர்களின் இவ்வாண்டிற்கான கல்விக் கட்டணத்தை  ரத்து செய்ய வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது. அதில் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.