Asianet News TamilAsianet News Tamil

இலங்கை பிரதமர் இராஜபக்சே மாபெரும் வெற்றி பெற்ற காரணம் இதுதான்... பகீர் கிளப்பும் ராமதாஸ்..!

இராஜபக்சே சகோதரர்கள் பெரும்பான்மை பெற்றதற்கு காரணம் இலங்கையின் அனைத்து பகுதிகளில் வாழும் சிங்களர்களிடையே இனவெறியை வரலாறு காணாத அளவுக்கு தூண்டியது தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

This is the reason why the Prime Minister of Sri Lanka Rajapaksa has won so much...ramadoss
Author
Tamil Nadu, First Published Aug 9, 2020, 5:50 PM IST

இராஜபக்சே சகோதரர்கள் பெரும்பான்மை பெற்றதற்கு காரணம் இலங்கையின் அனைத்து பகுதிகளில் வாழும் சிங்களர்களிடையே இனவெறியை வரலாறு காணாத அளவுக்கு தூண்டியது தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- இலங்கையில் அண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தலில் மகிந்த இராஜபக்சே தலைமையிலான இலங்கை பொதுமக்கள் முன்னணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இலங்கை பிரதமராக மகிந்த இராஜபக்சே மீண்டும் பொறுப்பேற்றுள்ள நிலையில், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்களின் உரிமை, பாதுகாப்பு குறித்த அச்சங்கள் எழுந்துள்ளன.

This is the reason why the Prime Minister of Sri Lanka Rajapaksa has won so much...ramadoss

இலங்கை நாடாளுமன்றத்திற்கு கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றத் தேர்தலில் இராஜபக்சே கட்சி, மொத்தமுள்ள 225 இடங்களில், 150-க்கும் கூடுதலான இடங்களைக் கைப்பற்றி மூன்றில் இரு பங்குக்கும் கூடுதலான பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. இலங்கை வரலாற்றில் கடந்த சில பத்தாண்டுகளில் எந்தக் கட்சியும் இந்த அளவுக்கு பெரும்பான்மை பெற்றது கிடையாது. நீண்ட காலத்துக்குப் பிறகு இராஜபக்சே சகோதரர்கள் தான் இந்த அளவுக்கு பெரும்பான்மையை வென்றெடுத்திருக்கின்றனர்.

இலங்கைத் தேர்தலில் பெரும்பான்மையை பெறுவதற்காக இராஜபக்சே சகோதரர்கள் கடைபிடித்த வழிமுறைகள் தான் மிகவும் ஆபத்தானவை ஆகும். இலங்கை மக்கள்தொகையில் தமிழர்களும், இஸ்லாமியர்களும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். இலங்கைத் தேர்தலில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை கடைபிடிக்கப் பட்டு வரும் நிலையில், அவர்களின் ஆதரவு இல்லாமல் பெரும்பான்மை பெறுவது சாத்தியம் கிடையாது. ஆனால், அதையும் கடந்து இராஜபக்சே சகோதரர்கள் பெரும்பான்மை பெற்றதற்கு காரணம் இலங்கையின் அனைத்து பகுதிகளில் வாழும் சிங்களர்களிடையே இனவெறியை வரலாறு காணாத அளவுக்கு தூண்டியது தான். அதுமட்டுமின்றி, தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சிங்களர்களை அதிக அளவில் குடியேற்றம் செய்தும், தமிழர்களை அச்சுறுத்தியும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளனர்.

This is the reason why the Prime Minister of Sri Lanka Rajapaksa has won so much...ramadoss

இலங்கைத் தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், சிங்களர்களுக்கு நன்றி செலுத்துவதற்காகவும், அவர்களின் ஆதரவை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட இராஜபக்சே சகோதரர்கள் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இலங்கை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பெற்றிருப்பதால், இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தை, நினைக்கும் வகையில் மாற்றும் வலிமை இராஜபக்சே சகோதரர்களுக்கு கிடைத்திருக்கிறது. அதைப் பயன்படுத்தி, 1987-ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை அமைதி உடன்பாட்டைத் தொடர்ந்து இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 13-ஆவது திருத்தத்தை ரத்து செய்ய இராஜபக்சே சகோதரர்கள் தீர்மானித்திருப்பதாக இலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் 13-ஆவது அரசியல் சட்டத் திருத்தம் இந்திய வலியுறுத்தலின் அடிப்படையில் செய்யப்பட்ட திருத்தம் ஆகும். அதனடிப்படையில் தான் இலங்கையில் மாநில அரசுகள் ஏற்படுத்தப்பட்டன. அந்த அரசுகளின் மூலம் தான் இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு, சில அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. 13-ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் ரத்து செய்யப்பட்டால், வட கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்கள் தாங்கள் வாழும் பகுதிகளில் தெருவிளக்கு போடுவதற்கும், குடிநீர் குழாய் அமைப்பதற்கும் கூட இராஜபக்சேக்களைத் தான் எதிர்நோக்க வேண்டியிருக்கும். தமிழர்களுக்கு கிடைத்திருந்த குறைந்தபட்ச அரசியல் அதிகாரமும் கூட பறிக்கப்பட்டு விடும். அதுமட்டுமின்றி, 13-ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை ரத்து செய்வது இந்தியாவை அவமதிக்கும் செயலாகும்; அதை இந்திய அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

This is the reason why the Prime Minister of Sri Lanka Rajapaksa has won so much...ramadoss

இலங்கை பிரதமராக மகிந்த இராஜபக்சே, அதிபராக அவரது சகோதரர் கோத்தபாய இராஜபக்சே ஆகியோர் பதவி வகிக்கின்றனர். இராஜபக்சேவின் சகோதரர்களான சமல் இராஜபக்சே, பசில் இராஜபக்சே, மகன் நமல் இராஜபக்சே ஆகியோர் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2009&ஆம் ஆண்டு இலங்கைப் போரின் போது தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணையை இலங்கை அரசு தடுத்து வந்தது. இலங்கை அதிபராக கோத்தபாய இராஜபக்சே பொறுப்பேற்றவுடன், போர்க்குற்ற விசாரணையிலிருந்து இலங்கை விலகிக் கொண்டது. இப்போது இலங்கையின் அனைத்து அதிகாரங்களும் ஒரே குடும்பத்தின் கீழ், அதுவும் போர்க்குற்றங்களை நிகழ்த்திய குடும்பத்தின் கீழ், வந்து விட்ட நிலையில், இனி ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் எனத் தோன்றவில்லை.

This is the reason why the Prime Minister of Sri Lanka Rajapaksa has won so much...ramadoss

இத்தகைய சூழலில் ஈழத்தமிழர்களின் அரைகுறை உரிமைகளையும், அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியது இந்திய அரசின் கடமை ஆகும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். அத்துடன் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணையை விரைவுபடுத்தி குற்றம் இழைத்தவர்கள் அனைவருக்கும், அவர்கள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும், தண்டனை கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Follow Us:
Download App:
  • android
  • ios