ரஜினிகாந்த் ஜனவரியில்  தனிக்கட்சி தொடங்குவது உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது. 

சென்னையில், நேற்று மன்ற நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பின், இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். வரும் சட்டசபை தேர்தலில், தீவிரமாக களமிறங்க ஆயத்தமாகும்படி, மன்றத்தினருக்கு உத்தரவிட்டுள்ள அவர், கூட்டணி அமைப்பது குறித்து, பின்னர் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஒருவர்கூறுகையில், ‘’அரசியல் நிலைப்பாடு குறித்து, ரஜினி கேட்டார். பெரும்பான்மையான நிர்வாகிகள், தனிக்கட்சி துவங்கி போட்டியிட்டால், நினைக்கும் மாற்றத்தை கொண்டு வரலாம் என்றோம்.

ஐந்து மண்டலங்களில், ஹெலிகாப்டர் மூலம் ஒரு பொதுக்கூட்டத்தில் மட்டும் பிரசாரம் செய்தால் போதும் என, அவரிடம் கூறினோம். 'நாம் தனியாக போட்டியிட்டால், எத்தனை சதவீதம் ஓட்டுக்கள் பெறலாம்' என, நிர்வாகிகளிடம் ரஜினி கேட்டார். அதற்கு, 2014ம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலில், தி.மு.க., தனித்து போட்டியிட்டு, 22 சதவீதம் ஓட்டுக்களை பெற்றது. 2019 லோக்சபா தேர்தலில், கூட்டணி அமைத்து போட்டியிட்டு, 18 சதவீதம் ஓட்டுக்களை, அ.தி.மு.க., பெற்றது.

தற்போதைய சூழலில், இரு கட்சிகளும் கூட்டணி பலத்துடன் உள்ளன. எனவே, நாமும் கூட்டணி அமைக்கலாம். பா.ஜ., காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள், நம்முடன் கூட்டணி வைக்க விரும்புகின்றன. பா.ம.க., - தே.மு.தி.க., மக்கள் நீதி மையம், அ.ம.மு.க., புதிய தமிழகம் போன்ற மாநில கட்சிகளும் தயாராக உள்ளன. எனவே, இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, வலுவான கூட்டணியை அமைக்க முடியும் என, அவரிடம் உறுதி அளித்தோம். கட்சியின் பெயர் கூட ’ஆன்மீக ஜனதா கட்சி’ என முடிவாகி விட்டது’’ என்கிறார் அவர்.