உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் அமைய உள்ள பிரம்மாண்ட ராமர் கோவிலுக்கு வரும் 5-ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட 170க்கும் குறைவான நபர்கள் மட்டும் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கான அழைப்பிதழ் வெளியாகியுள்ளது. மஞ்சள் நிற  அட்டையில் குங்குமப் பூ நிறத்தில் அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழ் கடிதத்தில் மோடி உட்பட மேலும் மூவரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ர் பிரதமர் மோடியை தவிர, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்திரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல்,  முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் பெயர்கள் அட்டையில் பொறிக்கப்பட்டுள்ளன. 

covid-19 நெருக்கடி காரணமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட உள்ளனர். அதேபோல் அழைப்பிதழ் கடிதத்தில் மேற்குறிப்பிட்ட பெயர்களைத் தவிர ராமரின் திரு உருவப்படமும் பொறிக்கப்பட்டுள்ளது, மொத்தத்தில் 150 பேருக்கு மட்டுமே அழைப்புகள் அனுப்பப்படுகின்றன. ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட தகவலின்படி 5 பேர் மட்டுமே மேடையில் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்திரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேல்,  மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மஹந்த் நிருத்யா கோபால் தாஸ்  ஆகியோர் அதில் அடங்குவர். ஆகஸ்ட் 5- ஆம் தேதி பிரம்மாண்ட ராமர்  கோயிலுக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் ஆகஸ்ட் -5 அன்று பிரதமர் மோடி மதியம் 12 :15 மற்றும் 15 வினாடிகளில் அடிக்கல் நாட்டுவார். சுமார் 40 கிலோ வெள்ளி செங்கலை தனது கைகளால் அவர் எடுத்து வைப்பதன் மூலம் நில வழிபாடு தொடங்குகிறது. 

ஆகஸ்ட் 5-அன்று நடைபெறும் இந்த நிகழ்ச்சி தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பப்படும், அயோத்தியில் இந்த திட்டத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. அதேபோல் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்ள மாட்டார் என தெரிகிறது. அதேபோல் பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டவர்கள் வயது மூப்பு காரணமாக விழாவில் கலந்து கொள்ள அனுமதி இல்லை. அவர்கள் காணொளி மூலமாக பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ராமர் கோவில் பூமி பூஜையில் அமித் ஷா பங்கேற்க  வாய்ப்பில்லை என இதுவரை உள்துறை அமைச்சகம் சார்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.