மதுரை ஒத்தக்கடை பொதுக்கூட்டத்தில் நடிகர் கமலஹாசன் மேடையில் ஏறியதும் முதலில் கட்சியின் பெயரை அறிவித்தார். பின்னர், அவர் அளித்த முதல் வாக்குறுதி நான் உங்கள் கருவி, உங்கள் தலைவன் அல்ல என உறுதியளித்தார். 

நடிகர் கமல்ஹாசன் ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். 

இன்று காலை கலாம் வீட்டிற்கு சென்ற கமல் அப்துல்கலாமின் சகோதரரிடம் ஆசி பெற்று கலாமின் பேரனிடம் நினைவு பரிசையும் பெற்றார். 

பின்னர், அப்துல்கலாம் பயின்ற பள்ளிக்கு செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அந்த திட்டத்தை ரத்து செய்தார்.

பின்னர் ராமேஸ்வரத்தில் மீனவர்களை சந்தித்து பேசிவிட்டு கலாமின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி அஞ்சலியும் செலுத்தினார். பின்னர் பரமக்குடியிலும் மானாமதுரையிலும் வாகனத்தில் இருந்தபடியே பேசினார். 

இந்நிலையில் மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் இன்று மாலை நடிகர் கமல்ஹாசன் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் கட்சி கொடியை ஏற்றி கட்சியின் பெயரையும் கொள்கைகளையும் அறிவிக்க உள்ளதாக ஏற்கனவே அரிவித்திருந்தார். இந்நிகழ்ச்சியில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுரை வந்திருந்தார்.  

அவரை சந்தித்த கமல் இருவரும் ஒரே காரில் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு கிளம்பினர். மைதானத்தை அடைந்த பின் நடிகர் கமலஹாசன் தனது கட்சியின் கொடியை ஏற்றி வணக்கம் செலுத்தினார். அவருடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இருந்தார். 

கொடி வெள்ளை நிறத்தில் 6 கரங்கள் ஒன்றோடு ஒன்று இருக்க பிடித்துள்ள நிலையில் உள்ளது. 

பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய நடிகர் கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்தார். பின்னர் அவர் அளித்த முதல் வாக்குறுதி நான் உங்கள் கருவி, உங்கள் தலைவன் அல்ல என உறுதியளித்தார். 

மேலும் நான் அறிவுரை கூறும் தலைவன் அல்ல எனவும் அறிவுரை கேட்கும் தொண்டன் எனவும் தெரிவித்தார். 

நமக்கு நிறைய கடமை இருக்கிறது எனவும் நாம் அரசியலுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இது ஒரு நாள் கொண்டாட்டமல்ல, வாழ்க்கை முறையாக மாற வேண்டும் என தெரிவித்தார்.