கடந்த வாரம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டிசம்பர் 31 ஆம் தேதி தனது கட்சியின் பெயரை அறிவிப்பார் என்றும், ஜனவரி முதல் அவர் களப்பணிகளைத் தொடங்குவார் என்றும் முறையாக அறிவிக்கப்பட்ட பின்னர், இது தோடர்பான பல யூகங்கள் பரவி வருகின்றன. கட்சி குறித்த ரஜினியின் அறிவிப்புக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், அவரது மூத்த சகோதரர் சத்யநாராயண ராவ் நேற்று திருவண்ணாமலை கோயிலுக்கு சென்றார்.

திருவண்ணாமலையின் அண்ணாமலையர் மற்றும் அருணகிரிநாதர் மீது ரஜினிகாந்திற்கு உறுதியான நம்பிக்கை இருப்பதாக அறியப்படுகிறது. அவரது சகோதரர் சத்தியநாராயண ராவ் தனது குடும்பத்தினருடன் அய்யங்குளத்தில் உள்ள அருணகிரிநாதர் கோயிலுக்கு விஜயம் செய்திருந்தார். ரஜினிகாந்த் மற்றும் அவரது ரசிகர்களின் ஆரோக்கியம் மற்றும் உடல் நலனிற்காக அவர் 'மிருத்யுஞ்சய் யாகம்' நடத்தியதாக கூறப்படுகிறது.

பின்னர் ஊடகங்களில் உரையாற்றிய சத்தியநாராயண ராவ், "ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியின் திட்டங்கள் மற்றும் அதை நிர்வகிக்கும் உறுப்பினர்கள் குறித்து உறுதியோடு இருக்கிறார். இது தொடர்பாக அவர் டிசம்பர் 31 அன்று அறிவிப்பை வெளியிடுவார். முக்கியமான அனைத்து முடிவுகளையும் அவர் எனக்கு கூறினாலும், நான் அவரது முடிவுகளில் தலையிடுவதில்லை. மாறாக அவரது வெற்றி மற்றும் நல்வாழ்வுக்காக எனது எல்லா ஆசீர்வாதங்களையும் தருகிறேன்." என்று கூறினார். "திராவிடக் கட்சிகள் அரசியலில் இருந்து அகற்றப்படுவதற்கான நேரம் இது. 

மக்கள் அவர்கள் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். மக்களின் வெவ்வேறு மத நம்பிக்கைகளை மதிக்காமல் நாத்திகத்தை ஊக்குவிப்பவர்கள் அவர்களே. மனிதநேயமே கடவுள், அனைத்து மதங்களை பின்பற்றும் மக்களுக்கும் உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும்” என்றும் அவர் கூறினார்.
வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் ரஜினியின் நிலைப்பாடு குறித்து கேட்டபோது, ​​"கடவுள் விரும்பினால், ரஜினி தனது முதல் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் இருந்து போட்டியிடக்கூடும்" என்றும் அவர் தெரிவித்தார்.