This is the best comedy of this month - TTV Dinakaran

திவாகரன் கட்சி தொடங்கியிருப்பதுதான் இந்த மாதத்தில் நான் கேட்ட சிறந்த காமெடி என்று எம்.எல்ஏ., டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

டிடிவி தினகரனுக்கும், திவாகரனுக்கும் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். இந்த நிலையில் மன்னார்குடியில் அம்மா அணி செயல்படுவதாக கூறி அதற்கான அலுவலகத்தை சசிகலா படத்துடன் திறந்தார். இதனைத் தொடர்ந்து தன் பெயரையோ, படத்தையோ அலுவலகத்தில் வைத்துக்கொள்ளக் கூடாது என்று கூறி வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார் சசிகலா. இதனைத் தொடர்ந்து சசிகலாவை முன்னாள் சகோதரி என்று திவாகரன் கூறியிருந்தார். 

இந்த நிலையில், திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்ற பெயரில் தனிக்கட்சியாக செயல்படும் என அறிவித்தார். அதன் பின்னர் கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார். சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை கட்சி கொடியை எங்கள் நிர்வாகிகள் ஏற்றியுள்ளதாகவும், மாநில அளவில் நிர்வாகிகள் பட்டியலையும் அப்போது அறிவித்தார்.

இது குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளரும், ஆர.கே.நகர் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், திவாகரன் அரசியல் கட்சி தொடங்கி இருப்பதுதான் இந்த மாதத்தில் நான் கேட்டு ரசித்த சிறந்த காமெடி? அவருக்கும் அண்ணாவிற்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி எழுப்பினார். இவரை நம்பி யார் கட்சியில் இணையார்வள் என்று விரைவில் தெரியும் என்றார்.

மேலும் பேசிய அவர், தமிழகத்தில் தற்போது ஆட்சியால் எந்த நலத்திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை மக்கள் போராட்டங்கள் நடக்கும். அதற்குப் பிறகு, நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழக சட்டசபைக்கும் நிச்சயம் தேர்தல் நடக்கும். அந்தத் தேர்தலில் அடுத்த மத்திய அரசை தமிழக மக்களே தீர்மானிப்பார்கள். அமமுக பெரும்பான்மை வெற்றி பெறும். தமிழக மக்களுக்குத் துரோகம் இழைப்பவர்கள் காணாமல் போவார்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.