பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிக்கு நடைபெற இருந்த நேர்காணல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு வரவேற்பு தெரிவித்திருக்கும் மருத்துவர் ராமதாஸ், இது பாமாவிற்கு கிடைத்த வெற்றி என கூறியுள்ளார். இது தொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில்,  'பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீட்டு விதிகள் மாற்றப்பட்டதை கண்டித்தும், அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் 09.01.2020 அன்று அறிக்கை வெளியிட்டு இருந்தேன். அதற்கு இப்போது பயன் கிடைத்திருக்கிறது' என்று பதிவிட்டுள்ளார்.

 

தொடர்ந்து, 'பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வரும் 22, 24, 25 ஆகிய தேதிகளில் பேராசிரியர்கள் பணிக்கு நடைபெறுவதாக இருந்த நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சமூகநீதி காப்பாற்றப்பட்டிருக்கிறது. இது பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும்'! என்று தெரிவித்துள்ளார்.

மேலும், 'பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீட்டு முறை மாற்றத்திற்கு காரணமானவர்கள் யார் என்று கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். நேர்காணலை ஒத்தி வைத்ததுடன் நிற்காமல் ஆள்தேர்வு அறிவிக்கையை ரத்து செய்து விட்டு, முறையான இடஒதுக்கீட்டு விதிப்படி புதிய அறிவிக்கை வெளியிட வேண்டும்'! என்றும் மருத்துவர் ராமதாஸ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.